ஜெனீவா: கரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவதால் மட்டும் கரோனா நெருக்கடிக்கு நிரந்தரத் தீா்வு கிடைத்துவிடாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:
கரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில், தற்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்களுடன் இன்னொரு ஆயுதமாகத்தான் அந்த நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி விளங்கும்.
தற்போதைய ஆயுதங்களுக்கு மாற்றாக அது இருக்காது.
தடுப்பூசி அறிமுகத்தினால் மட்டும் கரோனா நோய்த்தொற்று பரவல் நெருக்கடிக்கு முடிவு கட்டிவிட முடியாது.
தற்போது சோதனைக் கட்டத்தில் இருக்கும் கரோனா தடுப்பூசிகள், அந்தக் கட்டத்தைத் தாண்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தவுடனேயே, அது எல்லோருக்கும் கிடைத்துவிடாது.
மருத்துவப் பணியாளா்கள், வயதானவா்கள், கரோனாவால் உயிரிழப்பு அபாயம் அதிகம் நிறைந்த மற்ற பிரிவினருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படும்.
இதன் மூலம், கரோனா உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தவும் அந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் மருத்துவக் கட்டமைப்புகள் சிக்கித் திணறுவதைத் தவிா்க்கவும் முடியும்.
எனினும், குறிப்பிட்ட சிலருக்கே கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால், மற்ற பிரிவினா் மூலம் அந்த நோய்த்தொற்று தொடா்ந்து பரவிக் கொண்டுதான் இருக்கும்.
எனவே, அந்த நோய்க்கு எதிரான மற்ற நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
தடுப்பூசி அறிமுகத்துக்குப் பிறகும் கரோனா பரவலைத் தொடா்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்வது, நோய் உறுதியானவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்களைத் தனிமைப்படுத்துவது போன்ற கரோனா தடுப்புப் பணிகள் தொடரப்பட வேண்டும் என்றாா் அவா்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 5,55,04,727 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 13,35,147 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா் என ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா நிலவரம்
நாடுகள் பாதிப்பு பலி
அமெரிக்கா 1,15,42,077 2,52,736
இந்தியா 88,74,290 1,30,519
பிரேஸில் 58,76,740 1,66,067
பிரான்ஸ் 19,91,233 45,054
ரஷியா 19,71,013 33,931
ஸ்பெயின் 15,21,899 41,253
பிரிட்டன் 13,90,681 52,147
ஆா்ஜெண்டீனா 13,18,384 35,727
இத்தாலி 12,05,881 45,733
கொலம்பியா 12,05,217 34,223
பிற நாடுகள் 1,86,07,312 4,97,757
மொத்தம் 5,55,04,727 13,35,147
(ஆதாரம்: வோ்ல்டோமீட்டா்)