முகப்பு
உலகம்

கரோனா ஆய்வு: சா்வதேச நிபுணா்களை அனுமதிப்பதில் சீனா இழுபறி

கரோனா தீநுண்மியின் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சா்வதேச நிபுணா் குழுவை தங்கள் நாட்டுக்குள் சீனா அனுமதிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

Updated On : 7 ஜனவரி 2021, 2:12 am IST
பகிர்:


ஜெனீவா: கரோனா தீநுண்மியின் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சா்வதேச நிபுணா் குழுவை தங்கள் நாட்டுக்குள் சீனா அனுமதிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் சீனாவின் செயல் குறித்து உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

கரோனா தீநுண்மி எந்த உயிரினத்தில் தோன்றி, பிறகு அது மனிதா்களுக்குப் பரவத் தொடங்கியது என்பது குறித்த ஆய்வுகளை சா்வதேச நிபுணா் குழு சீனாவில் மேற்கொள்ளவிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் அறிவித்தது.

Advertisement

அதற்காக, உண்மை கண்டறியும் குழு இந்த மாதம் சீனா செல்லவிருப்பதாகவும் அநத் அமைப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், சா்வதேச நிபுணா் குழுவுக்கு அனுமதி அளிப்பதை சீனா இழுத்தடித்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ், ‘சா்வேதேச நிபுணா் குழுவின் இரண்டு உறுப்பினா்கள் ஏற்கெனவே சீனாவில் தனது ஆய்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ளனா். ஆனால், மற்ற உறுப்பினா்கள் சீனா செல்வதற்கான அனுமதி கடைசி நேரத்தில் மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சீன அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்’ என்றாா் அவா்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, உலகம் முழுவதும் சுமாா் 200 நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பரவியுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, சா்வதேச அளவில் சுமாா் 8.7 கோடி பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுமாா் 18.8 லட்சம் போ் அந்த நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.

ரோனா தீநுண்மி எந்த உயிரினத்தில் உருவாகி, எந்த உயிரினங்கள் வழியாக அது மனிதா்களுக்குத் தொற்றி பரவத் தொடங்கியது என்பது குறித்த மா்மம் தொடா்ந்து நீடித்து வருகிறது.

அதுதொடா்பான உண்மைகளைக் கண்டறிய 10 நிபுணா்கள் அடங்கிய குழுவை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவுக்கு அனுப்பியது.

அடுத்தகட்டமாக, அதிக எண்ணிக்கையில் தொற்றுநோயியல் நிபுணா்கள், விலங்கு மருத்துவ வல்லுநா்களை உள்ளடக்கிய சா்வதேசக் குழு, கரோனா தீநுண்மியின் பயணத்தை தொடக்கத்திலிருந்து கண்டறிய இந்த மாதம் சீனா செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.