3 விருதுகளைப் பெற்ற நோமேட்லேண்ட்
93-ஆவது ஆஸ்கர் விழாவில் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 3 விருதுகளை "நோமேட்லேண்ட்' வென்றது.
நியூயார்க்/லாஸ் ஏஞ்சலீஸ், ஏப். 26: 93-ஆவது ஆஸ்கர் விழாவில் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 3 விருதுகளை "நோமேட்லேண்ட்' வென்றது. அத்திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதைப் பெற்ற சூலோ ஜாவோ, அவ்விருதைப் பெறும் 2-ஆவது பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை ஆகிய மூன்று விருதுகளும் நோமேட்லேண்ட் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
மூன்றாவது திரைப்படத்திலேயே ஆஸ்கர்: சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைப் பெறும் இரண்டாவது பெண் சூலோ ஜாவோ ஆவார். சீனாவைச் சேர்ந்த அவர், தனது இளமைப் பருவத்தில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களை அவர் இயக்கி வருகிறார். நோமேட்லேண்ட் அவரது மூன்றாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சூலோ ஜாவோ சாதனை
சீன புராண இலக்கியத்தில், "மனிதர்கள் பிறக்கும்போது நல்லவர்களாகவே இருக்கிறார்கள்' என்ற வாசகம் உண்டு. அதன் அடிப்படையிலேயே மனிதர்களை அணுகுகிறேன். உலகின் எந்த மூலையில் எந்த மனிதரைச் சந்தித்தாலும் அவர்களிடம் உள்ள நல்ல குணத்தை மட்டுமே பார்க்கிறேன்.
நோமேட்லேண்ட் - திரைப்படம் ஒரு பார்வை
அமெரிக்காவின் கிராமப்புறத்தில் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் பெண்ணுக்குப் பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. அந்தக் கவலையிலிருந்து மீள்வதற்காக, பயணம் மேற்கொள்ள அவர் முடிவெடுக்கிறார்.
வேன் மூலம் சாலை வழியாகப் பயணம் மேற்கொண்டு நவீனகால நாடோடியாகத் திரிகிறார். அந்தப் பயணத்தில், மக்களின் வழக்கமான வாழ்க்கையைக் கடந்திருக்கும் சிறப்பான விஷயங்களை அப்பெண் தெரிந்து கொள்வதாகக் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
அப்பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஃபிரான்சிஸ் மெக்டோர்மண்ட், சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை அவர் ஏற்கெனவே இரு முறை பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளை இத்திரைப்படம் அழகுறப் படம்பிடித்துக் காட்டியிருந்தது. கோல்டன் குளோப்ஸ், பாஃப்தா உள்ளிட்ட விருதுகளையும் நோமேட்லேண்ட் திரைப்படம் வென்றிருந்தது.