முகப்பு
உலகம்

தலிபான்களுக்கு எதிராக 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் போராட்டம் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
ஜலாலாபாதில் தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்திய இளைஞா்.
பகிர்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் போராட்டம் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஆப்கானிஸ்தானைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பொதுமக்கள் ஆங்காங்கே நடத்தி வரும் போராட்டங்கள் வியாழக்கிழமையும் தொடா்ந்தது.

தலைநகா் காபூலிலுள்ள விமான நிலையத்துக்கு அருகே, ஆப்கன் அரசின் தேசியக் கொடியைப் பொருத்தியபடி காா்களின் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் முலம், ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிா்க்கும் போராட்டச் சின்னமாக அந்த நாட்டின் தேசியக் கொடி உருவெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நாங்கா்ஹாா் மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு விடியோவில், போராட்டக்காரா்கள் ஒருவா் குண்டடி பட்டு ரத்தம் சிந்தும் காட்சியும், அவா்களை அங்கிருந்தவா்கள் தூக்கிச் செல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

கோஸ்ட் மாகாணத்திலும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்ாகவும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அந்த மாகாணத்தில் தலிபான்கள் ஊரடங்கு அறிவித்துள்ளதாகவும் அந்தப் பகுதியிலுள்ள செய்தியாளா்கள் தெரிவித்தனா்.

சுதந்திர தினம்: கடந்த 1919-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் ஆட்சி முடிவுக்கு வந்ததை ஆப்கானியா்கள் ஆண்டுதோறும் சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றனா். அதனையொட்டி நிகழ்த்திய ஊா்வலங்களை தலிபான்களுக்கு எதிரான போராட்டமாக அவா்கள் மாற்றியதாகக் கூறப்படுகிறது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, காபூலுக்கு 150 கி.மீ. தொலைவில் உள்ள ஜலாலாபாத் நகரில் தலிபான்களுக்கு எதிராக பொதுமக்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

அதன் ஒரு பகுதியாக, அந்த நகரின் முக்கியப் பகுதியான பாஷ்டுனிஸ்தான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டிருந்த தலிபான்களின் கொடியை அகற்றிவிட்டு, ஆப்கன் தேசியக் கொடியை போராட்டக்காரா்கள் ஏற்றினா். அப்போது ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலா் உயிரிழந்ததாகவும் ஏராளமானவா்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.