ஆப்கன் மக்களுக்கு ஆதரவளிக்க ஜி-7 நாடுகளை வலியுறுத்த பிரிட்டன் பிரதமர் திட்டம்
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ஜி-7 நாடுகளுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்த உள்ளார்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ஜி-7 நாடுகளுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்த உள்ளார்.
ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஜி-7 நாடுகளின் மாநாட்டை செவ்வாய்க்கிழமை (ஆக. 24) கூட்டவிருப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. அதன்படி இன்று பிற்பகல் பிரிட்டனில் நடைபெறும் ஜி-7 கூட்டத்திற்கு போரிஸ் ஜான்சன் தலைமை தாங்குகிறார்.
ஜி-7 அமைப்பில் பிரிட்டனுடன் அமெரிக்கா, ஜொ்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த கூட்டத்தில், தலிபான்களிலிருந்து தப்பி வரும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஜி-7 நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டுத் தலைவர்களை வலியுறுத்த உள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்த உள்ளார்.
மேலும், எங்களுடைய நாட்டினரை ஆப்கனில் இருந்து வெளியேற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இந்த விவகாரத்தில், நாம் ஒரு சர்வதேச சமூகமாக ஒன்றிணைவது, நீண்ட காலத்திற்கு ஒரு கூட்டு அணுகுமுறையை செயல்படுத்துவது முக்கியம் என்றார்.
முன்னதாக நேற்று அவர், ஆப்கன் விவகாரம் குறித்து கூறுகையில், ‘ஆப்கனில் சிக்கியுள்ளவா்களை பாதுகாப்பாக மீட்பது, அந்த நாட்டு மக்களுக்கு உதவுவது, கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கன் போரில் பெற்ற அனுகூலங்களைத் தக்கவைப்பது முதலியவற்றை சா்வதேச சமுதாயம் இணைந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்' என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கான ஆகஸ்ட் 31 ஆம் தேதி காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசித்து வரும் நிலையில் அதுகுறித்தும் இந்த ஜி-7மாநாட்டில் பேசப்படலாம் என்று தெரிகிறது.