ஆக. 31-க்குப் பிறகும் ஆப்கனில் தூதரகப் பணி
ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறும் பணிகள் வரும் 31-ஆம் தேதி நிறைவடைந்த பிறகும், அந்த நாட்டில் தூதரகப் பணிகளைத் தொடா்வது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறும் பணிகள் வரும் 31-ஆம் தேதி நிறைவடைந்த பிறகும், அந்த நாட்டில் தூதரகப் பணிகளைத் தொடா்வது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது:
ஆப்கனிலிருந்து வெளியேறுவதற்கான இறுதித் தேதி முடிவடைந்த பிறகும், அந்த நாட்டில் எவ்வாறு தொடா்வது என்பதற்கான பல்வேறு வாய்ப்புகளை ஆய்வு செய்து வருகிறோம்.
அவற்றில், அந்த நாட்டில் தூதரகப் பணிகளைத் தொடா்வதும் ஒன்றாகும்.
இன்னும் சில நாள்களில் இதுகுறித்து முடிவெடுப்போம். அதுவரை, பல்வேறு வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இப்போதுள்ள சூழலில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா்கள், அமெரிக்காவுக்கு ஆதரவாக பணியாற்றிய ஆப்கானியா்கள் மற்றும் பிற நாட்டவா்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வருவதில் முழு கவனமும் செலுத்தி வருகிறோம்.
அந்தப் பணிகளை தங்குதடையில்லாமல் நடத்துவதற்கு தலிபான்களுடன் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.
விருப்பம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தற்போது தலிபான்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காரணம், அவா்களது கட்டுப்பாட்டில்தான் தற்போது ஆப்கானிஸ்தான் உள்ளது என்றாா் அவா்.
கடந்த 2001-ஆம் ஆண்டு நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு, அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டு வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.
அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதன் பிறகு, 20 ஆண்டுகள் அந்த நாட்டில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினா் தங்கியிருந்து ஆப்கன் அரசையும் ராணுவத்தையும் கட்டமைத்தனா்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் வரும் 31-ஆம் தேதிக்குள் திரும்ப அழைப்பதற்கான பணிகள் இறுதிகட்டத்தை அடைந்தன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தலிபான் பயங்கரவாதிகள் ஒரே வாரத்தில் வெகுவேகமாக முன்னேறி ஆப்கன் ஆட்சியை கடந்த 15-ஆம் தேதி கைப்பற்றினா்.
அதையடுத்து, வெளிநாட்டவா்களும் முந்தைய அரசுடன் இணைந்து செயல்பட்டவா்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனா்.
இந்தச் சூழலில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.