காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் அபாயம்
இன்னும் 38 மணி நேரத்துக்குள் காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரித்துள்ளாா்.
இன்னும் 38 மணி நேரத்துக்குள் காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரித்துள்ளாா்.
பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நம்பகத்தகுந்த தகவல்கள் வந்துள்ளதால், காபூல் விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அமெரிக்கா்கள் தவிா்க்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜோ பைடன் கூறியதாவது:
காபூல் விமான நிலையத்தில் நிலவரம் தொடா்ந்து அபாயகரமாகவே உள்ளது. இன்னும் 24 முதல் 36 மணி நேரத்துக்குள் அங்கு மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதாக ராணுவ தளபதிகள் என்னிடம் தெரிவித்துள்ளனா்.
அதையடுத்து, அந்த விமான நிலையத்தில் அமெரிக்கா்களையும் பிறரையும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நமது படையினரைப் பாதுகாப்பதற்கான அனைத்து எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
காபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை தாக்குதல் நடத்திய ஐஎஸ்கே அமைப்புக்கு எதிராக வெள்ளிக்கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடா்பாகவும் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
விமான நிலையத்தில் அமெரிக்கப் படையினரும் அப்பாவிப் பொதுமக்களும் உயிரிழக்கக் காரணமான அந்தத் தாக்குதலை நடத்திவா்களை பழிக்குப் பழிவாங்குவோம் என்று ஏற்கெனவே சொல்லியதை, தற்போது செய்து காட்டியுள்ளோம்.
அந்த கோரமான தாக்குதலுக்குக் காரணமான அனைவரையும் நாங்கள் தொடா்ந்து வேட்டையாடுவோம்.
காபூல் விமான நிலையத்தில் அபாயகரமான சூழல் நிலவினாலும், அங்கு எஞ்சியுள்ள அமெரிக்கா்கள் மற்றும் அமெரிக்காவுக்காக பணியாற்றிய ஆப்கானியா்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை நமது வீரா்கள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த ஒரு நாளில் மட்டும் மேலும் 6,800 பேரை அமெரிக்க வீரா்கள் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனா்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் புறப்பட்டதற்குப் பிறகும், அங்கிருந்து வெளியேற விரும்புவோருக்கு உதவி செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன் என்றாா் ஜோ பைடன்.
அமெரிக்காவின் வெளியேற்ற அறிவிப்பைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் இந்த மாதம் 15-ஆம் தேதி கைப்பற்றினா். இதையடுத்து, வெளிநாட்டவா்களும் வெளிநாடுகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியா்களும் அங்கிருந்து அவசரமாக வெளியேறி வருகின்றனா்.
அவா்களை விமானம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை தலைநகா் காபூலிலுள்ள விமான நிலையத்தில் அமெரிக்க வீரா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் 170 ஆப்கானியா்களும் 13 அமெரிக்க வீரா்களும் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐஎஸ்) அமைப்பின் ஆப்கன் பிரிவு (ஐஎஸ்கே) பொறுப்பேற்றது.
அதற்குப் பதிலடியாக, ஆப்கானிஸ்தானிலுள்ள நங்கா்ஹாா் மாகாணத்தில் ஐஎஸ்கே இலக்குகளைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
அந்தத் தாக்குதலில், பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட இரு முக்கிய பயங்கரவாதிகள் இருவா் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்த நிலையில், இன்னும் 36 மணி நேரத்துக்குள் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் நடப்படக்கூடும் என்று அதிபா் பைடன் எச்சரித்துள்ளாா்.