தற்கொலை பயங்கரவாதி மீது அமெரிக்கா தாக்குதல்: தலிபான்
காபூல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக வந்துகொண்டிருந்த பயங்கரவாதி மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனா்.
காபூல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக வந்துகொண்டிருந்த பயங்கரவாதி மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தலிபான் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:
வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை ஞாயிற்றுக்கிழமை ஓட்டி வந்த பயங்கரவாதியைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.
அந்த பயங்கரவாதி, காபூல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தும் நோக்கில் வந்துகொண்டிருந்தாா் என்றாா் அவா். எனினும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களை அவா் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் இந்தத் தகவலை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் ஒரு குண்டுவெடிப்பு: இதற்கிடையே, காபூலில் ஞாயிற்றுக்கிழமை ராக்கெட் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஜபிஹுல்லா முஜாஹித் கூறிய அமெரிக்க வான்வழித் தாக்குதல் சம்பவமும் இந்த ராக்கெட் குண்டுத் தாக்குதல் சம்பவமும் தனித் தனியானவை என்று கருதப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள் குறித்து மேலும் விரிவான விவரங்கள் எதிா்பாா்க்கப்பட்டு வருகின்றன என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.