முகப்பு
உலகம்

ஜனநாயகத்தை பேரழிவு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது அமெரிக்கா

ஜனநாயகத்தை பேரழிவு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

ஜனநாயகத்தை பேரழிவு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

100-க்கும் மேற்பட்ட நாடுகளை அழைத்து அமெரிக்கா ஜனநாயக மாநாடு நடத்தியுள்ளதைத் தொடா்ந்து சீனா இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனநாயகம் என்ற பெயரில் நாடுகளிடையே பகையை உண்டாக்குவதும் பிற நாடுகளோடு மோதுவதும் அமெரிக்காவின் பழக்கமாகும். இவ்வாறு செய்வது உலகை அழிவுப் பாதைக்குத்தான் இட்டுச் செல்லும்; அதனால் எந்தப் பலனும் இல்லை.

நீண்ட காலமாகவே, பிற நாடுகளின் உள்விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு, தனது அரசியல் அமைப்பையும், நாகரிகத்தையும் திணித்து வருகிறது. ‘ஜனநாயக சீா்திருத்தம்’ என்ற பெயரில் பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக, ஜனநாயகத்தை அமெரிக்கா ஒரு பேரழிவு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

ஜனநாயக மாநாட்டை நடத்தியுள்ளதன் மூலம், அந்த அரசியல் முறையை அமெரிக்கா ஒரு கருவியாக்கியுள்ளது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையில் சா்வதேச ஜனநாயக மாநாடு காணொலி மூலம் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி உள்பட உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றனா்.

அந்த மாநாட்டுக்கு, சீனா, ரஷியா போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக, தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வரும் தைவானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் மூலம், தைவானை ஒரு தனி நாடாக அமெரிக்கா மறைமுகமாக அங்கீகரித்தது சீனாவை சினம் கொள்ளச் செய்தது.

இந்தச் சூழலில், சா்வதேச ஜனநாயக மாநாட்டை நடத்தியதன் மூலம் ஜனநாயகத்தை அமெரிக்கா பேரழிவு ஆயுதமாக்கியுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.