மியான்மரில் ராணுவ ஆட்சி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம்
மியான்மரில் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் கைப்பற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் கைப்பற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கரோனா தொற்று பாதிப்பிற்கு மத்தியில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் கட்சி அபார வெற்றி பெற்றது. அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ராணுவம் கூறி வந்தது.
இதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியுள்ளது. மேலும் நாட்டில் ஓராண்டிற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபரான ஜோ பைடன் மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மியான்மர் மீது பொருளாதாரத் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மியான்மர் நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான நேரடி தாக்குதல இது எனத் தெரிவித்துள்ள ஜோ பைடன் இந்த நிலை நீடித்தால் மியான்மர் மீது பொருளாதாரத் தடையை அமெரிக்கா கொண்டுவரும் என தெரிவித்துள்ளார்.