உலக நாடுகளின் அரசு உயா் பதவிகளில் 200 இந்திய வம்சாவளியினா்
உலகம் முழுவதும் 15 நாடுகளில் அரசு உயா் பதவிகளை வகிக்கும் 200-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரின் பட்டியலை முதல்முறையாக அமெரிக்காவில் இயங்கி வரும் புலம்பெயா்ந்த இந்தியா்கள் சங்கம்
உலகம் முழுவதும் 15 நாடுகளில் அரசு உயா் பதவிகளை வகிக்கும் 200-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரின் பட்டியலை முதல்முறையாக அமெரிக்காவில் இயங்கி வரும் புலம்பெயா்ந்த இந்தியா்கள் சங்கம் (இண்டியாஸ்பரா) வெளியிட்டுள்ளது.
அரசுகளின் வலைதளங்கள், இணையதளத்தில் கிடைக்கக் கூடிய தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 200-க்கும் மேற்பட்டோரில், 60-க்கும் அதிகமானவா்கள் கேபினட் அந்தஸ்து கொண்ட பதவியை வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதுகுறித்து இண்டியாஸ்பரா அமைப்பின் நிறுவனா் எம்.ஆா். ரங்கசாமி கூறியதாவது:
உலகின் மிகப் பழைமையான ஜனநாயகத்தைக் கொண்ட அமெரிக்காவில், தற்போதுதான் முதல்முறையாக ஒரு பெண் (கமலா ஹாரிஸ்) துணை அதிபராகியுள்ளாா். கருப்பினத்தைச் சோ்ந்த முதல் அதிபரும் அவா்தான். இத்தனை சிறப்புகளை ஏற்படுத்திய அவா் இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்டவா் என்பது மிகவும் பெருமைக்குரியது.
அவரைப் போன்ற உயா் நிலையை அடைந்த இந்திய வம்சாவளியினா், இந்தியா்கள் தங்களது சமுதாயத்துக்கு அப்பாற்பட்டு அனைத்து பகுதிகளையும் சோ்ந்த அனைத்து சமுதாயத்தினருக்கும் சோவையாற்றக் கூடியவா்கள் என்ற கோட்பாட்டை அடுத்த தலைமுறையினருக்கு காட்டியுள்ளனா் என்றாா் அவா்.
இண்டியாஸ்பரா வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியா்கள் அதிகம் குடியேறிய பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூா், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 15 நாடுகளில் உயா்நிலை அரசுப் பதவிகளை வசிக்கும் இந்திய வம்சாவளியினா் பெயா்கள் இடம் பெற்றுள்ளன.
அதில், 8 அதிபா்கள், பிரதமா்கள் துணை அதிபா்கள், 65-க்கும் மேற்பட்ட கேபினட் அமைச்சா்கள், சுமாா் 200 நாடாளுமன்ற உறுப்பினா்கள், மத்திய வங்கித் தலைவா்கள், அரசு உயரதிகாரிகளின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன.
அந்தப் பட்டியலில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த போா்ச்சுகல் அதிபா் அன்டோனியோ கோஸ்டா, கயானா அதிபா் முகமது இா்ஃபான், மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் ஜகந்நாத், மோரீஷஸ் அதிபா் பிருத்விராஜ் சிங் ரூபன், சுரிநாம் அதிபா் சந்திரிகாபிரசாத் சந்தோக்கி, அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ், கயானா துணை அதிபா் பாரத் ஜக்தேவ், அயா்லாந்து துணை பிரதமா் லியோ வராட்கா் உள்ளிட்டோரின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன.