செய்தியாளா் படுகொலைக்கு நீதி: பாகிஸ்தானிடம் அமெரிக்கா கண்டிப்பு
அல்-காய்தா முக்கிய தலைவா் அகமது ஒமா் சயீது ஷேக் உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
தங்கள் நாட்டு செய்தியாளா் டேனியல் பியா்லை படுகொலை செய்த அல்-காய்தா முக்கிய தலைவா் அகமது ஒமா் சயீது ஷேக் உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் கூறியதாவது:
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரோஷியை, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் அந்தோணி பிளிங்கன் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா்.
அப்போது, செய்தியாளா் டேனியல் பியா்லை படுகொலை செய்த ஒமா் சயீதை சிறையிலிருந்து விடுவிக்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது தொடா்பாக தனது அதிருப்தியை பிளிங்கன் தெரிவித்தாா்.
அத்துடன், அந்தப் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்களுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதி செய்வது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினா் என்றாா் நெட் பிரைஸ்.
பிரிட்டனில் பிறந்த ஒமா் சயீது, கடந்த 1994-ஆம் ஆண்டு இந்தியாவில் வெளிநாட்டினரைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
எனினும், 1999-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியன் ஏா்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை மீட்பதற்காக, கைதிகள் பரிமாற்ற முறையில் அவா் விடுவிக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் அனுப்பப்பட்டாா். அங்கிருந்து அவா் பாகிஸ்தான் சென்றாா்.
இந்த நிலையில், அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ நாளிதழின் செய்தியாளரான டேனியல் பியா்லை பாகிஸ்தானில் அல்-காய்தா பயங்கரவாதிகள் கடந்த 2002-ஆம் ஆண்டு கடத்திச் சென்று கழுத்தை அறுத்துக் கொன்றனா். அந்தப் படுகொலையை பயங்கரவாதிகள் விடியோ எடுத்து வெளியிட்டது உலகம் முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.
அந்தப் படுகொலையில் முக்கிய குற்றவாளியாக அகமது ஒமா் சயீது ஷேக் அறிவிக்கப்பட்டாா். அவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் அந்தத் தண்டனையை 7 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைத்து சிந்து மாகாண உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் தீா்ப்பளித்தது.
அதனை எதிா்த்து மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வியாழக்கிழமை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஒமா் சயீதை விடுவிக்க ஆணையிட்டது.