கரோனாவால் பெற்றோர்களை, பாதுகாவலர்களை இழந்த 15 லட்சம் குழந்தைகள்
உலகம் முழுக்க கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 15 லட்சம் குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களில் ஒருவரையாவது இழந்திருப்பார்கள் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வருடத்திலிருந்து தற்போது வரை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக கரோனாவின் தீவிரம் தொடர்ந்து வருகிற நிலையில் உலகம் முழுக்க கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 15 லட்சம் குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களில் ஒருவரையாவது இழந்திருப்பார்கள் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
' தி லான்செட் ' என்கிற இதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையின் தகவலின் படி , உலகம் முழுவதும் கரோனாவின் கொடிய பிடியில் சிக்கி இதுவரை 10 லட்சம் குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களில் இருவரையும் அல்லது ஒருவரையாவது இழந்திருப்பார்கள் என்றும் மேலும் 5 லட்சம் குழந்தைகள் அவர்களின் தாத்தா , பாட்டியை அல்லது பாதுகாப்பாளரை இழந்திருப்பார்கள் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் ஏப்ரல் 2021 தரவுகளின் படி பெற்றோர்களை இழந்த குழந்தைகள் 49,139 பேர் . இது மார்ச் 2021 ( 5091 பேர் ) நிலவரத்தை விட 8.5 அதிகமடைதிருக்கிறது.
தற்போது பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பெரிய சவாலை சந்தித்து வருகிறார்கள் . குறிப்பாக உடல் நலம், மனநலம், பாதுகாப்பு, பாலியல் வன்முறை மற்றும் இளம் வயது கர்ப்பம் என பல ஆபத்துகளுக்கு மத்தியில் அவர்கள் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாகவும் ஒவ்வொரு இரண்டு மரணங்கள் நிகழும்போதும் ஒரு குழந்தை தன் பெற்றோரையோ அல்லது பராமரிப்பாளரையோ இழக்கிறது. இந்த 15 லட்சம் குழந்தைகள் 30 லட்சம் மரணங்களின் சாட்சியங்கள் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் கரோனா முன் எச்சரிக்கை மையத்தின் பொறுப்பாளர் மருத்துவர் சூசன் கில்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் தென் ஆப்பிரிக்கா , பெரு , அமெரிக்கா , இந்தியா , பிரேசில் மற்றும் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த குழந்தைகளே அதிகமாக பெற்றோர்களை மற்றும் பராமரிப்பாளர்களை இழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து நாடுகளிலும் கரோனாவால் இழந்தவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம் எனவும் கைவிடப்பட்ட குழந்தைகளின் வாழ்வின் மேம்பாட்டிற்காக விரைந்து நடவடிக்கை எடுக்கவும் ஆராய்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள் .