பாகிஸ்தானில் ஹிந்து மத பத்திரிகையாளர் கொலை
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து மத பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து மத பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார்.
முடிதிருத்தும் கடையில் இருந்த 31 வயதான ஹிந்து பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிந்து மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
சிந்து மாகாணத்தை சேர்ந்த அஜய் லால்வானி என்பவர் அங்குள்ள தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சுக்குர் பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடையில் அவர் இருந்தபோது, இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த மர்ம நபர்கள் லால்வானி மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
பாகிஸ்தானில் தொடர்ந்து ஹிந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதற்கு பாகிஸ்தான் அமைச்சரவையின் ஹிந்து உறுப்பினர் லால் சந்த் மாலி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''சிந்து மாகாணத்தில் ஹிந்து பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது பாதுகாப்பின்மையை உணரச்செய்கிறது. உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு இரங்கல்'' என்று பதிவிட்டுள்ளார்.
பத்திரிகையாளர் லால்வானி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பத்திரிகையாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.