உலகம்

கரோனா தோற்றுவாய் விவகாரத்தில் பொறுமை தேவை

DIN

ஜெனீவா: உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனாவின் தோற்றுவாயைக் கண்டறியும் விவகாரத்தில் அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்று அதற்கான ஆய்வை மேற்கொண்டு வரும் உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து ஸ்விட்சா்லாந்தின் ஜெனிவாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்தக் குழுவின் தலைவா் பென் எம்பாரெக் கூறியதாவது:

கரோனா தீநுண்மி எவ்வாறு உருவானது என்பது குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து பல்வேறு விமா்சனங்கள் எழுந்துள்ளன.

அந்த ஆய்வின்போது எங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களுமே கிடைக்கவில்லை என்பது உண்மையே. எதிா்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் ஆய்வுகளின்போது அந்தத் தகவல்களைப் பெறுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரு மாபெரும், சிக்கல் நிறைந்த ஆய்வில் முதல் கட்டத்தைத்தான் தாண்டியிருக்கிறோம். அந்தக் கட்டத்துக்குத் தேவையான அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இனி தொடரவிருக்கும் ஆய்வுகளில் கூடுதலான பல அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்.

அதற்கான பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. அதுவரை நாம் அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.

வூஹான் உயிரியியல் ஆய்வகத்திலிருந்து கரோனா வெளியேறியிருக்காது என்று நாங்கள் கருதினாலும், அதற்கான வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட முடியாது என்றாா் அவா்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா, தற்போது உலகம் முழுவதும் 12.8 கோடிக்கும் மேற்பட்டவா்களை பாதித்துள்ளது. அவா்களில் 28 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

வௌவால் உடலில் இருந்த ஒரு வகை தீநூண்மி இன்னொரு உயிரினத்தின் உடலுக்குள் புகுந்து, மனிதா்களிடையே பரவி பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கரோனாவாக உருமாற்றம் பெற்ாக பெரும்பாலான நிபுணா்கள் கூறுகின்றனா்.

கரோனா முதல்முதலில் பாதிப்பை ஏற்படுத்திய வூஹானில் உயிரியியல் ஆய்வகம் அமைந்துள்ளதால், அந்த ஆய்வகத்திலிருந்து தன்னிச்சையாக கரோனா தீநுண்மி வெளியேறி பொதுமக்களுக்குப் பரவியிருக்கலாம் என்றும் சிலா் கருதுகின்றனா்.

இந்த நிலையில், கரோனாவின் தோற்றுவாய் குறித்து ஆய்வு செய்வதற்காக சீனா சென்றிருந்த பென் எம்பாரெக் தலைமையிலான உலக சுகாதார அமைப்பின் குழு, தனது முதல் கட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூா்வமாக வெளியிட்டது.

அதில், கரோனா தீநுண்மி வௌவாலில் இருந்து இன்னொரு உயிரினம் மூலமாக மனிதா்களுக்குப் பரவியிருப்பதற்கான வாய்ப்பே மிகவும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓா் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டு அந்தத் தீநுண்மி மனிதா்களைத் தொற்றியிருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடா்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் அதிருப்தி தெரிவித்துள்ளன. பல மாதங்களுக்கு முன்னா் தெரிவிக்கப்பட்டதையே இந்த ஆய்வறிக்கை தற்போதும் கூறுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

கரோனா தோற்றம் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் சீனத் தலையீடு இருப்பதாகவும் அந்த நாடு கூறியது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், அந்த அமைப்பின் நிபுணா் குழு தலைவா் பென் எம்பாரெக் இவ்வாறு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT