அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, முதன்முறையாக ஒரு பிரத்தியேகத் தமிழ் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
தற்பொழுது நம் நாட்டைப் போலவே, அமெரிக்காவிலும் கரோனா பெருந்தொற்று குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு, அமெரிக்காவின் நியூ ஜெர்சி தமிழ் சங்கம் சார்பில் அக்டோபர் 17 ஞாயிறு அன்று தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக, அழகிய திருவள்ளுவர் சிலையை சங்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநரான டாக்டர் பழனிசாமி சுந்தரம் திறந்துவைத்தார். இந்தச் சிலை, உலகத் தமிழ் அமைப்பின் வி.ஜி. சந்தோஷத்திடம் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை பரிசாகப் பெற்றதாகும்.
தொடர்ந்த நிகழ்ச்சிகள் பலவும் திருக்குறளையே மையமாகக் கொண்டு இருந்தன.
திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தையே தமிழ்க் குழந்தைகள் இசையுடன் பாடி பக்தி மணம் சேர்த்தனர். மூத்த அறிஞர் முருகானந்தம் "அன்றாட வாழ்வில் திருக்குறள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். ப்ளைன்ஸ்போரோ தமிழ் கிளப்பின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில திருக்குறள்களை இரண்டுஇரண்டாக வாசித்தது வித்தியாசமாகவும் அடுத்தது என்ன என ஆவலைத் தூண்டுவதாகவும் அமைந்தது.
இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியை விழாவில் பங்கேற்றவர்கள் பெரிதும் பாராட்டினர். இது நியூ ஜெர்சியில் முதன்முறையாக நடைபெற்ற ஒரு பிரத்தியேகத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும்.
இக்கண்காட்சி ஒரு துளிக் கவிதை, அட்லாண்டா தமிழ் நூலகம், வல்லின சிறகுகள், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் முனைவர் வாசு ரெங்கநாதன் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்.
முனைவர் வாசு தனது உரையில், இத்தகைய புத்தகக் கண்காட்சிகள், ஒரு மொழியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை என்றார். அத்துடன், நிகழ்வை ஏற்பாடு செய்வதில் சங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.
சங்கத்தின் தலைவர் பாலமுரளி கோதண்டராமன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வரவேற்றனர்.
ஜெயகாந்தன், கவிஞர் வைரமுத்து, பிரபஞ்சன், ஈரோடு தமிழன்பன், தமிழ்ச் செம்மல் சோம வீரப்பன் போன்ற பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் உட்பட சுமார் 450 புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருத்தன. கல்கியின் சிறு கதைகள், பிரபஞ்சனின் சிறுகதைகள், சோம வீரப்பனின் "குறள் இனிது" போன்ற நூல்கள் உடனே விற்றுத் தீர்ந்தன!
பஞ்சதந்திரம் போன்ற குழந்தைகளுக்கான புத்தகங்களும் பலரைக் கவர்ந்தன. இசை, நடனம், தீபாவளி ஷாப்பிங் மற்றும் உணவு ஸ்டால்களுடன் கூடிய நிகழ்ச்சி பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.