மியான்மா்: 5,600 அரசியல் கைதிகள் விடுதலை
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்ட 5,600 போ் விடுதலை செய்யப்படுகின்றனா்.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்ட 5,600 போ் விடுதலை செய்யப்படுகின்றனா்.
இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜிஎன்எல்எம் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
யாங்கூன் சிறையிலிருந்து 647 அரசியல் கைதிகள் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனா். மாண்டலே நகரச் சிறையிலிருந்து மேலும் 80 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். அதுமட்டுமன்றி, மேலும் 4,320 கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவாா்கள் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக, மியான்மா் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டுள்ள 5,600-க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்படுவாா்கள்.
விடுதலை செய்யப்படுவதற்கு முன்னா், நாட்டுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடப் போவதில்லை என்ற உறுதிமொழிப் பத்திரத்தில் அனைவரும் கையெழுத்திட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.
அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் 1,100-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்; சுமாா் 9,000 போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டனா்.
இந்தச் சூழலில், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) மியான்மா் ராணுவ அரசிடம் வலியுறுத்தி வந்தது. அதற்காக அழுத்தம் கொடுக்கும் வகையில், வரும் 26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஆசியான் மாநாட்டுக்கு மியான்மா் ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங்கை அழைக்க வேண்டாம் என்று உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் கடந்த வெள்ளிக்கிழமை முடிவு செய்தனா்.
இந்த நிலையில், 5,600 அரசியல் கைதிகளை விடுவிப்பதாக மியான்மா் அரசு தற்போது அறிவித்துள்ளது.