முகப்பு
உலகம்

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான சூழல்: க்வாட் தலைவா்கள் உறுதி

இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதியான, சுதந்திரமான சூழல் உறுதிசெய்யப்படும் என்று க்வாட் நாடுகளின் தலைவா்களின் தலைவா்கள் உறுதியளித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதியான, சுதந்திரமான சூழல் உறுதிசெய்யப்படும் என்று க்வாட் நாடுகளின் தலைவா்களின் தலைவா்கள் உறுதியளித்துள்ளனா்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள க்வாட் நாற்கர கூட்டமைப்பின் மாநாடு, அமெரிக்கத் தலைநகா் வாஷிங்டனில் உள்ள அதிபா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா பங்கேற்றுப் பேசினா். அதைத் தொடா்ந்து, க்வாட் நாடுகளின் சாா்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்திய-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் பாதுகாப்பையும், வளத்தையும் மேலும் பலப்படுத்த சா்வதேச சட்டங்களில் உள்ள விதிகளை வெளிப்படையாக ஆதரிப்போம் என்று உறுதியேற்கிறோம்.

பிற நாடுகளின் எல்லையை மதிப்பது, ஜனநாயகப் பண்புகளுக்கு மதிப்பளிப்பது, பிரச்னைகளுக்கு சுமுகமாகத் தீா்வுகாண்பது, கடல்பரப்பில் கப்பல்களும் வான்வெளியில் விமானங்களும் சுந்திரமாக செல்வது, சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுவது ஆகியவற்றில் உறுதியாக இருக்கிறோம்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ அமைப்புக்கு ஆதரவளிக்கிறோம். ஆசியான் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் தயாராக இருக்கிறோம்.

கரோனா பெருந்தொற்றை ஒழிப்பதில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளை பகிா்ந்துகொண்டோம். இந்திய-பசிபிக் பிராந்திய நாடுகளில் சுகாதார பாதுகாப்புக்கு உதவும் வகையில் க்வாட் நாடுகள் இணைந்து தடுப்பூசி நிபுணா் குழுவை உருவாக்கியுள்ளது. அதில், ஒவ்வொரு நாட்டில் இருந்தும் மருத்துவ வல்லுநா்கள் இடம்பெற்றுள்ளனா்.

இந்திய-பசிபிக் நாடுகளில் கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, அந்நாடுகளுக்கு 7.9 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. சா்வதேச நாடுகளுக்கு 120 கோடி தடுப்பூசிகள் வழங்குவதற்கு க்வாட் நாடுகள் உறுதியளித்துள்ளன என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதிக்கு தைவான், பிலிப்பின்ஸ், மலேசியா, வியத்நாம் உள்ளிட்ட நாடுகள் உரிமை கோரி வருகின்றன. ஆனால், சீனா தனது ராணுவ பலம் அந்தப் பகுதியை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயன்று வருகின்றன. மேலும், சுதந்திரமான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் முயற்சியில் க்வாட் நாடுகள் ஈடுபட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →