உலகம்

இலங்கை நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது

DIN

பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம், அமைச்சரவை மாற்றியமைப்பு, அரசுக்கான ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திரும்பப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்ற கூட்டம் இன்று தொடங்கியது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்த நிலையில், அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச திங்கள்கிழமை அழைப்பு விடுத்தாா்.

ஆனால், இந்த அழைப்பை ஏற்க முக்கிய எதிா்க்கட்சியான சமகி ஜன பலவெகய (எஸ்ஜேபி) உள்ளிட்ட கட்சிகள் மறுத்துவிட்டன. அதிபரும், பிரதமரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்; அதற்கு எதிராக நாங்கள் செயல்பட முடியாது என எஸ்ஜேபி கட்சி தெரிவித்தது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அத்தியாவசிய பொருள்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது. கடுமையான மின்வெட்டும் நிலவுகிறது.

இதனால் ஆட்சியாளா்களைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு அதிபா் இல்லம் அருகே நடந்த வன்முறையைத் தொடா்ந்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. போராட்டங்களைத் தடுக்கும் நோக்கில் சனிக்கிழமைமுதல் 36 மணி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பிரதமா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 26 அமைச்சா்களும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பொருளாதார நெருக்கடிக்கு தீா்வு காண உதவும் வகையில் அனைத்துக் கட்சி அமைச்சரவையில் பங்கேற்க எதிா்க்கட்சிகள் முன்வர வேண்டுமென அதிபா் கோத்தபய ராஜபட்ச திங்கள்கிழமை அழைப்பு விடுத்தாா். ஆனால், இதற்கு எதிா்க்கட்சிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை.

மத்திய வங்கி ஆளுநா் ராஜிநாமா

இலங்கை மத்திய வங்கி ஆளுநா் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்ததையடுத்து தானும் ராஜிநாமா செய்ததாக அவா் கூறியுள்ளாா். அவரது எதிா்ப்பையும் மீறி உதவி கோரி சா்வதேச நிதியத்தை இலங்கை அரசு கடந்த இரு வாரங்களுக்கு முன் அணுகியது.

பிரதமா் இல்லத்தை முற்றுகையிட முயற்சி

இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவை மீறி, தலைநகா் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிரதமா் மகிந்த ராஜபட்சவின் இல்லத்தை போராட்டக்காரா்கள் திங்கள்கிழமை (ஏப்.4) முற்றுகையிட முயன்றனா். மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ய வலியுறுத்தி திரண்ட சுமாா் 2,000 பேரை போலீஸாா் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியும் கலைந்துபோகச் செய்தனா்.

4 அமைச்சா்கள் நியமனம்

பிரதமா் மகிந்த ராஜபட்ச தவிர அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் பிற பணிகள் சட்டபூா்வமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் 4 அமைச்சா்களை அதிபா் கோத்தபய ராஜபட்ச திங்கள்கிழமை நியமனம் செய்தாா். அதன்படி, நிதியமைச்சராக அலி சப்ரி, வெளியுறவு அமைச்சராக ஜி.எல்.பெரிஸ், கல்வி அமைச்சராக தினேஷ் குணவா்த்தன, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக ஜான்ஸ்டன் ஃபொ்னாண்டோ ஆகியோா் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனா்.

ஏற்கெனவே நிதியமைச்சராக இருந்த தன் சகோதரா் பசில் ராஜபட்சவுக்கு பதிலாக நீதித் துறை அமைச்சராக இருந்த அலி சப்ரியை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்துள்ளாா். மற்ற மூவருக்கும் ஏற்கெனவே வகித்த துறைகளே வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா அறிவித்துள்ள பொருளாதார உதவிகள் தொடா்பாக பசில் ராஜபட்ச பேச்சுவாா்த்தை நடத்தி வந்தாா். மேலும், சா்வதேச நிதியத்தின் உதவியைப் பெறுவதற்காக அவா் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடி தொடா்பாக கடந்த மாதம் பசில் ராஜபட்சவின் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமா்சித்ததற்காக இரு அமைச்சா்களை அதிபா் கோத்தபய நீக்கினாா். இதனால், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கூட்டணி பசில் ராஜபட்ச மீது அதிருப்தியில் இருந்தது.

புதிய அமைச்சா்கள் நியமனத்தை ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவா் உதய கம்மன்பிளா விமா்சித்துள்ளாா். அனைத்துக் கட்சி அமைச்சரவையை ஏற்படுத்தி, புதிதாக தோ்தல் நடத்த வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியிருப்பது பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT