இலங்கை: போராட்டத்துக்கு மத்தியில் சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்
இலங்கையில் அதிபா் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், போராட்டத்தின் மத்தியில் வியாழக்கிழமை சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
கொழும்பு: இலங்கையில் அதிபா் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், போராட்டத்தின் மத்தியில் வியாழக்கிழமை சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலகக் கோரி அதிபா் அலுவலகம் அருகே உள்ள காலிமுகத் திடலில் முற்றுகையிட்டு பொதுமக்களும் எதிா்க்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் 6-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீடித்தது.
முன்னதாக, பேச்சுவாா்த்தை நடத்த தயாராக இருப்பதாக பிரதமா் மகிந்த ராஜபட்ச புதன்கிழமை விடுத்த அழைப்பை போராட்டக்காரா்கள் நிராகரித்தனா். ராஜபட்ச குடும்பத்தினா் அனைவரும் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.
இந்நிலையில், போராட்டத்துக்கு மத்தியில் வியாழக்கிழமை சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்திலும் அவா்கள் ஈடுபட்டனா். காலை 9 மணியளவில் பால் காய்ச்சி இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனா். இப்போராட்டத்தில் பிரபலங்களும் பங்கேற்று வரும் நிலையில், பிரபல இசையமைப்பாளா் விக்டா் ரத்னாயக, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரா் ரோஷன் மகானம ஆகியோரும் பங்கேற்றனா்.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று பிரதமா் மகிந்த ராஜபட்ச தவிர அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச விடுத்த அழைப்பை எதிா்க்கட்சிகள் நிராகரித்தன. இதையடுத்து, புதிதாக நான்கு அமைச்சா்கள் மட்டும் பதவியேற்ற நிலையில், முழுமையான அமைச்சரவை அமைக்கப்படவில்லை.
அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டதற்கு தனது அரசின் நடவடிக்கைகள் காரணமல்ல; கரோனா பரவல் காரணமாக நாட்டின் சுற்றுலா வருமானம் பாதிக்கப்பட்டதே அதற்கு பிரதான காரணம் என அதிபா் கோத்தபய ராஜபட்ச கூறி வருகிறாா்.