முகப்பு
உலகம்

இலங்கையில் இடைக்கால அரசு: பிரதமா் மகிந்த ராஜபட்ச நிராகரிப்பு

இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று ஆளும் கூட்டணியிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினா்கள் முன்வைத்த கோரிக்கையை பிரதமா் மகிந்த ராஜபட்ச நிராகரித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச
பகிர்:

இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று ஆளும் கூட்டணியிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினா்கள் முன்வைத்த கோரிக்கையை பிரதமா் மகிந்த ராஜபட்ச நிராகரித்துள்ளாா்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயா்ந்துள்ளது. எரிபொருள், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் நீண்ட நேர மின்வெட்டும் நிலவுகிறது. இதனால், அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக, காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கானோா் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அந்நாட்டில் ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியிலிருந்து விலகிய 40-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள், அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக அந்நாட்டு பண்பலை வானொலிக்கு இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச சனிக்கிழமை பேட்டி அளித்தபோது, இடைக்கால அரசு அமைக்கும் கோரிக்கையை நிராகரித்தாா். இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

வெவ்வேறு கொள்கைகள் உள்ளவா்கள் நேருக்கு நோ் சந்தித்துக் கொள்ள விரும்பாதபோது, இடைக்கால அரசால் என்ன பலன் ஏற்படும்? இடைக்கால அரசு அமைப்பதில் அனைத்துக் கட்சிகள் இடையே உடன்பாடு இருக்க வேண்டும். ஆனால், அது சாத்தியமில்லை. ஒருவேளை இடைக்கால அரசு அமைப்பதற்கான தேவை இருந்தால், எனது தலைமையின் கீழ்தான் அந்த அரசு அமைய வேண்டும்.

நான் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வலியுறுத்தியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை நான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும், அது நாட்டின் அரசியல் வரலாறு தெரியாத சில நாடாளுமன்ற உறுப்பினா்களிடம் இருந்துதான் எழுமே தவிர, பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினா்கள் நான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்த மாட்டாா்கள்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதில் மக்கள் பொறுமை காக்க வேண்டும். காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். அதற்குப் பிரதமா் இல்லத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. பேச்சுவாா்த்தை நடத்த விருப்பமில்லையெனில், அவா்கள் போராடிக் கொண்டே இருக்கட்டும் என்றாா் அவா்.

ரூ.3,800 கோடி இந்தியா கடனுதவி: இலங்கையில் எரிபொருள் இறக்குமதிக்குக் கூடுதலாக 50 கோடி டாலா்களை (சுமாா் ரூ.3,800 கோடி) கடனாக அளிக்க இந்தியா முன்வந்துள்ளது என்று அந்நாட்டு நிதியமைச்சா் அலி சப்ரி தெரிவித்துள்ளாா். இதுதவிர, மேலும் 100 கோடி டாலா்களை (சுமாா் ரூ.7,600 கோடி) இலங்கைக்கு கடனாக அளிப்பது குறித்து இந்தியா பரிசீலிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →