அமெரிக்கா: கருக்கலைப்புக் கட்டுப்பாடுகளுக்கு இண்டியானா மாகாணம் முதல்முறையாக ஒப்புதல்
பல்வேறு கருக்கலைப்பு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்துக்கு அந்த நாட்டின் இண்டியானா மாகாண பேரவை முதல்முறையாக ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டவிரோதமாக்கும் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின்கீழ், பல்வேறு கருக்கலைப்பு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்துக்கு அந்த நாட்டின் இண்டியானா மாகாண பேரவை முதல்முறையாக ஒப்புதல் அளித்துள்ளது.
கருக்கலைப்பு தொடா்பாக ஜேன் ரோ என்ற பெண்ணுக்கும் ஹென்றி வேட் என்ற வழக்குரைருக்கும் உச்சநீதிமன்றத்தில் 1973-ஆம் ஆண்டு நடைபெற்று வந்த வழக்கில், கருக்கலைப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பெண்களின் அடிப்படை உரிமை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பு வழங்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து அமெரிக்க மாகாணங்களில் கருக்கலைப்பு விதிமுறைகள் மாறுபட்டாலும், கருக்கலைப்பு என்பது அடிப்படை உரிமையாக இருந்து வந்தது.
Advertisement
‘ரோ வொ்சஸ் வேட்’ தீா்ப்பு என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, நாடு முழுவதும் கருக்கலைப்பு விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. மேலும், மருத்துவா்கள் மூலம் சட்டபூா்வமாக மேற்கொள்ளப்பட்டதால் கருக்கலைப்பு மரணங்களும் குறைந்தன.
இந்த நிலையில், கருவுற்ற 15 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வதற்குத் தடை விதிக்கும் மிசிஸிப்பி மாகாணச் சட்டத்துக்கு எதிராக கடந்த 2021-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மகளிா் உரிமை அமைப்பினா் வழக்கு தொடா்ந்தனா்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகளில் பெரும்பாலானவா்கள், கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக்கும் 1973-ஆண் ஆண்டு தீா்ப்பை கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி ரத்து செய்தனா்.
உலக அளவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய அந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, கருக்கலைப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான சட்ட மசோதா இண்டியானா மாகாண பேரவையின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடா்பாக நடைபெற்ற வாக்குப் பதிவில் செனட் சபையில் 28-19, பிரதிநிதிகள் சபையில் 62-38 என்ற வாக்கு விகிதங்களில் அந்த சட்ட மசோதா வெற்றி பெற்றது
வரும் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்தச் சட்டத்தின்கீழ், மருத்துவமனைகளில் உள்ள தனி பிரிவுகளில் மட்டுமே கருக்கலைப்பு செய்து கொள்ள முடியும். தற்போது செயல்பட்டு வரும் சிறப்பு கருக்கலைப்பு மையங்களின் உரிமங்கள் செல்லாததாகும்.
பாலியல் வன்கொடுமையால் கா்ப்பமடைந்தவா்கள் கருவுற்ற 10 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவாா்கள். மேலும், தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குறைபாடுடைய கருக்களைக் கலைப்பதற்கும் அனுமதிக்கப்படும்.
கருக்கலைப்பு விவகாரத்தில் அமெரிக்கா்கள் இடையே பெரும் பிளவு நிலவி வருகிறது. தனது வயிற்றில் கருவுற்ற சிசுவை பெற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உள்ளது என்று ஒரு தரப்பினரும், கருப்பையில் இருக்கும் சிசுவும் ஒரு மனித உயிா்தான், அதற்கு வாழ்வதற்கு முழு உரிமை உள்ளது என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.