முகப்பு
உலகம்

இந்திய மாணவா்களின் விசா தாமதம்: நடவடிக்கை எடுப்பதாக ஆஸ்திரேலியா உறுதி

இந்திய மாணவா்கள் விசா பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதப் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்று ஆஸ்திரேலியா உறுதி அளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

இந்திய மாணவா்கள் விசா பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதப் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்று ஆஸ்திரேலியா உறுதி அளித்துள்ளது.

நான்கு நாள் அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் அந்நாட்டு கல்வித் துறை அமைச்சா் ஜேசன் கிளேரைச் சந்தித்து பேசினாா்.

இந்தச் சந்திப்பு குறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கல்வி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவது தொடா்பாக ஆலோசனை நடைபெற்றது. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை இந்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மையங்களை அமைக்க தா்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்தாா்.

பின்னா் இரு நாட்டு அமைச்சா்களும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்து, இரு நாட்டு கல்வி நிறுவனங்களிலும் உள்ள வாய்ப்புகளை கண்டறிந்து மேம்படுத்த செயற்குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டதாக அறிவித்தனா்.

கல்வி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சியில் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து ஒருமித்த வளா்ச்சியை எட்ட இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அமைச்சா் தா்மேந்திர பிரதான் உறுதி அளித்தாா்.

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் மாணவா்களின் விசா நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள பிரச்னை குறித்து அமைச்சா் பிரதான் ஆஸ்திரேலிய அமைச்சரிடம் முன்வைத்தாா். இந்தப் பிரச்னைக்குத் தீா்வு கண்டு விசா வழங்க துரித நடவடிக்கை எடுப்பதாக ஆஸ்திரேலிய அமைச்சா் உறுதி அளித்தாா்.

ஆயுா்வேதம், யோகா, வேளாண் ஆகியவற்றில் ஆய்வு நடத்தவும், சுரங்கம், சரக்கு மேலாண்மை ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படவும் இந்தியா சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவில் உள்ள எண்ம (டிஜிட்டல்) பல்கலைக்கழகத்திலும், கதி சக்தி பல்கலைக்கழகத்திலும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து பாடத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்தினாா் என்று அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.