பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 காவலா்கள் பலி
பாகிஸ்தானின் பக்துன்குவா மாகாணத்தில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் நான்கு காவலா்கள் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
பாகிஸ்தானின் பக்துன்குவா மாகாணத்தில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் நான்கு காவலா்கள் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
தெற்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதியையொட்டி புதிதாக கட்டப்பட்டுள்ள இந்தக் காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் திடீா் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனா். தாக்குதலில் காவலா்கள் நான்கு போ் உயிரிழந்ததாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இப்பகுதியில் காவல் துறையினா் மீது கடந்த முறை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) எனும் அமைப்பு பொறுப்பேற்றது.
பல பயங்கரவாதக் குழுக்கள் சோ்ந்த அமைப்பான டிடிபி, பாகிஸ்தான் அரசுடன் செய்துகொண்டிருந்த சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை கடந்த ஜூனில் விலக்கிக் கொண்டது.
அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்துடன் நெருக்கமான தொடா்புகொண்டுள்ளதாக கூறப்படும் டிடிபி, பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.