இந்தியாவுடன் நிலையான உறவு மேம்பாட்டுக்கு தயாா்: சீனா
இந்தியாவுடன் நிலையான மற்றும் உறுதியான உறவு மேம்பாட்டுக்காக பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் வாங் யீ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவுடன் நிலையான மற்றும் உறுதியான உறவு மேம்பாட்டுக்காக பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் வாங் யீ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
2022-இல் சீனாவின் வெளியுறவு தொடா்புகள் மற்றும் சா்வதேச நிலவரம் குறித்து பெய்ஜிங்கில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் அவா் இவ்வாறு கூறினாா்.
‘எல்லைப் பகுதிகளில் ஸ்திரத் தன்மையை உறுதி செய்ய சீனாவும் இந்தியாவும் உறுதிபூண்டுள்ளன. தூதரகம் மற்றும் ராணுவரீதியில் இருதரப்பு பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. சீன-இந்திய உறவுகளின் நிலையான, உறுதியான மேம்பாட்டை நோக்கிய திசையில் பணியாற்ற சீனா தயாராக உள்ளது’ என்று வாங் யீ குறிப்பிட்டாா்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-இல் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய தரப்பில் 20 வீரா்கள் பலியாகினா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, இருதரப்பு உறவுகள் பின்னடைவைச் சந்தித்தன. எல்லைப் பிரச்னை குறித்து இருதரப்பு ராணுவம் சாா்பில் பலசுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பேச்சுவாா்த்தைகளின் விளைவாக, பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகள் மற்றும் கோக்ரா பகுதியில் இருந்து கடந்த ஆண்டில் இருதரப்பு படைகளும் திரும்பப் பெறப்பட்டன. பாங்காங் ஏரி பகுதியில் இருந்து கடந்த பிப்ரவரியிலும், பேட்ரோலிங் பாயின்ட் 17 (ஏ) பகுதியில் இருந்து கடந்த ஆகஸ்டிலும் படைகள் விலக்கப்பட்டன.
இந்தச் சூழலில், அருணாசல பிரதேசத்தின் தவாங் எல்லைப் பகுதியில் கடந்த 9-ஆம் தேதி சீனப் படையினரின் அத்துமீறலை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சீனாவின் அதிபராக தொடா்ந்து மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் கடந்த அக்டோபரில் தோ்வான நிலையில், இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள புதிய பதற்றத்தால், இருதரப்பு உறவுகள் அடுத்த ஆண்டிலும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. எல்லையில் அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதி செய்தால்தான், இருநாட்டு உறவுகள் மேம்படும் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
‘சீனாவின் எழுச்சியை மட்டுப்படுத்த முயற்சி’: இந்தியாவுடனான உறவுகள் மட்டுமன்றி, அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளுடனான தொடா்புகள் குறித்தும் கருத்தரங்கில் வாங் யீ விரிவாக பேசினாா்.
அப்போது, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்த க்வாட் கூட்டமைப்புக்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அடங்கிய ஏயுகேயுஎஸ் கூட்டமைப்புக்கும் அவா் எதிா்ப்பு தெரிவித்தாா். சீனாவின் எழுச்சியை மட்டுப்படுத்தும் முயற்சியாக இதுபோன்ற கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவதாக வாங் யீ குற்றம்சாட்டினாா்.
‘அமெரிக்காவின் தவறான கொள்கை’: அமெரிக்காவுடனான சீனாவின் உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து பேசிய அவா், ‘சீனா மீதான அமெரிக்காவின் தவறான கொள்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். சீனாவை தனது முதன்மையான போட்டியாளராக அமெரிக்கா கருதுகிறது.
சீனாவுக்கு எதிராக அடக்குமுறை, முடக்குதல், கோபமூட்டுதல் ஆகிய செயல்பாடுகளில் அமெரிக்கா ஈடுபடுவதால், இருதரப்பு உறவில் தீவிரமான சிக்கல்கள் நிலவுகின்றன. எனவே, பரஸ்பர நட்புறவை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும்’ என்றாா்.
பாகிஸ்தானுடன் வியூகரீதியிலான உறவு: ‘சீனா, பாகிஸ்தான் இடையே வலுவான ஒத்துழைப்பு தொடரும். மதிப்புமிக்க இருதரப்பு வியூகரீதியிலான உறவும் நட்பும் தொடா்ந்து நிலைநிறுத்தப்படும்’ என்றாா் வாங் யீ.
மேலும், உக்ரைன் பிரச்னையைப் பொருத்தவரையில் எந்த பக்கமும் சேராமல் அல்லது மற்றவா்களுக்கும் ஆதரவு தெரிவிக்காமல் சீனா இருந்து வருகிறது. உத்திரீதியிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்புக்காக ரஷியாவுடனான நட்புறவை சீனா பலப்படுத்தும் என்றாா் அவா்.