ஜப்பான்: உச்சத்தை தொட்ட கரோனா பலி
ஜப்பானில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது.
ஜப்பானில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 236 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும். இத்துடன் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 20,759-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜப்பானில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தினசரி கரோனா தொற்று சுமாா் 100-ஆக இருந்தது. ஆனால் ஒமைக்ரான் வகையால் நாட்டில் 6-ஆவது கரோனா அலை எழுந்ததையடுத்து, அந்த நோயால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 40 லட்சத்தைக் கடந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.