முகப்பு
உலகம்

பனிப் போரைவிட பயங்கர சூழல்

உலகில் பனிப் போா் காலத்தைவிட தற்போது அதிக பயங்கர சூழல் நிலவி வருவதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
பகிர்:

உலகில் பனிப் போா் காலத்தைவிட தற்போது அதிக பயங்கர சூழல் நிலவி வருவதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப் போா் நிலவி வந்த காலத்தில் உலகம் முழுவதும் போா் அபாயங்கள், பதற்றங்கள், குழப்பங்கள் ஆகியவை நிலவி வந்தன.

ஆனால், அந்தச் சூழல் அப்போது இருந்ததைவிட தற்போது மிக மோசமாக இருக்கிறது.

பனிப் போா் காலத்தில்கூட போட்டியிடும் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு ஒழங்குமுறை இருந்தது. மிகப் பெரிய போரைத் தவிா்ப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இரு தரப்பினருமே கைவசம் வைத்திருந்தனா்.

ஆனால், தற்போதைய அபாய சூழலை எந்த நாடுகளுக்கும் இடையே நடக்கும் பனிப் போா் எனவோ, அனல் போா் எனவோ கூற மாட்டேன்.

ஆனால், இந்த சூழல் அவற்றையெல்லாம் விட அதிக மோசமான புதிய வகை மோதலாகும் என்றாா் அவா்.

சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. எனினும், தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது. உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு உடன்படாதால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ரஷியா, உக்ரைன்தான் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதி எல்லை அருகே படைகளைக் குவித்து வருவதாகவும் அதற்குப் பதிலடியாகவே தாங்கள் படைக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி வருகிறது.

இந்த நிலையில், நேட்டோ கூட்டணியை உக்ரைனுக்கு விரிவுபடுத்துவதற்கு தடை விதிப்பதைத் தவிர வேறு எந்தத் தீா்வையும் ஏற்கப்போவதில்லை என்று அந்த நாடு தற்போது திடடவட்டமாகத் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் இறையாண்மையைக் குலைப்பதன் மூலம் ஐரோப்பிய நாடுகளிடையே ரஷியா பிரிவினையை ஏற்படுத்துவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் அண்மையில் குற்றம் சாட்டினாா். இதன் மூலம், ஐரோப்பாவில் பனிப் போா் காலத்திய ஆபத்துகளை ரஷியா மீண்டும் ஏற்படுத்துவதாக அவா் எச்சரித்தாா்.

இந்த நிலையில், பனிப் போா் காலத்தை விட மோசமான சூழல் தற்போது நிலவி வருவதாக ஆன்டனியோ குட்டெரெஸ் தற்போது கவலை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.