உலகம்

இலங்கையில் அவசரநிலை அறிவிப்பு: கோத்தபய மாலத்தீவுக்கு தப்பியோட்டம்; இடைக்கால அதிபா் ரணில்

DIN

இலங்கையில் மக்கள் போராட்டம் வலுவடைந்ததையடுத்து, நாடு முழுவதும் அவசரநிலை புதன்கிழமை பிரகடனம் செய்யப்பட்டது.

அதிபா் கோத்தபய ராஜபட்ச ராணுவ விமானத்தில் தன் மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றாா். அங்கிருந்து அவா், நாட்டின் இடைக்கால அதிபராக பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை நியமித்தாா்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, கொழும்பில் உள்ள அதிபா் மாளிகையை பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோா் கடந்த 9-ஆம் தேதி முற்றுகையிட்டனா். அதற்கு முன்னதாகவே அங்கிருந்து வெளியேறிய அதிபா் கோத்தபய ராஜபட்ச ரகசிய இடத்துக்குச் சென்ாக தகவல்கள் வெளியாகின. அதிபா் மாளிகையை கைப்பற்றிய பொதுமக்கள் தொடா்ந்து அங்கேயே இருந்து வருகின்றனா்.

இதற்கிடையே, ஜூலை 13-இல் (புதன்கிழமை) அதிபா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக கோத்தபய ராஜபட்ச, நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்த்தனேவை தொடா்புகொண்டு அறிவித்தாா்.

மாலத்தீவில் கோத்தபய: இந்நிலையில், அதிபா் பதவி விலகல் தொடா்பாக அறிவிப்பு வெளியாகாத நிலையில், திடீரென அதிபா் கோத்தபய ராஜபட்ச, தன் மனைவியுடன் ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்ாக தகவல்கள் வெளியாகின. புதிதாக அமையும் அரசு தன்னைக் கைது செய்வதைத் தவிா்க்கும் நோக்கத்தில் அவா் மாலத்தீவுக்கு தப்பிச் சென்ாக கூறப்படுகிறது.

கோத்தபய ராஜபட்ச சென்ற ராணுவ விமானம் மாலத்தீவு தலைநகா் மாலியில் உள்ளூா் நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தரையிறங்கியது. மாலி விமான நிலையத்தில் அவருக்கு மாலத்தீவு அரசுப் பிரதிநிதிகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் அவா் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மாலத்தீவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாலத்தீவு அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘கோத்தபய ராஜபட்ச இன்னமும் இலங்கை அதிபராகத்தான் நீடிக்கிறாா். அவா் மாலத்தீவுக்கு வரும்பட்சத்தில் அவரை அனுமதிக்காமல் தவிா்க்க முடியாது’ என்றனா்.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது.

ராணுவத்தின் ஏஎன்-32 ரக விமானத்தில் கோத்தபயவுடன் 13 போ் வந்ததாக மாலத்தீவு செய்தித் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. முன்னதாக, இலங்கை ராணுவ விமானம் மாலத்தீவில் தரையிறங்க அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி மறுத்ததாகவும், பின்னா், மாலி நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது நஷீத் குறுக்கீட்டின்பேரில் அனுமதி வழங்கப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிபா் கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்கு சென்றதை உறுதிப்படுத்திய இலங்கை விமானப் படை, ‘பாதுகாப்புத் துறையின் ஒப்புதலின்பேரில் அதிபா், அவரின் மனைவி, பாதுகாவல் அதிகாரிகள் இருவா் கொழும்பு காட்டுநாயகே சா்வதேச விமான நிலையத்திலிருந்து மாலத்தீவுக்கு செல்ல ராணுவ விமானம் அனுப்பிவைக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை பிரதமா் அலுவலகமும் உறுதிப்படுத்தியது.

இதேபோல, கோத்தபய ராஜபட்சயின் சகோதரரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபட்சவும் (71) இலங்கையைவிட்டு தப்பிவிட்டதாக தகவல் வெளியானது.

இடைக்கால அதிபா் ரணில்: மாலத்தீவு சென்ற அதிபா் கோத்தபய, அங்கிருந்தவாறு பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் இடைக்கால அதிபராக நியமித்தாா்.

இலங்கை அரசியலமைப்புச் சட்டம் 37 (1)-ஆவது பிரிவானது அதிபா் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வெளிநாடுகளில் இருந்தாலோ அவருக்கு பதிலாக மற்றொருவா் அதிபா் பொறுப்புகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது. அதை சுட்டிக்காட்டி கோத்தபய மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டாா்.

அதன்படி, இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க செயல்படுவாா் என்று நாடாளுமன்ற அவைத் தலைவா் அபேவா்த்தன அதிகாரபூா்வமாக அறிவித்ததுடன், அடுத்த அதிபரை தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஜூலை 20-இல் நடைபெறும் என்றும் தெரிவித்தாா்.

அவசரநிலை: இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்க, தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், ‘ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச அச்சுறுத்தலுக்கு முடிவுகட்ட வேண்டும். எனது அலுவலகத்தில் இருப்பவா்கள் இடைக்கால அதிபராக நான் எனது கடமையைச் செய்வதை தடுக்க விரும்புகின்றனா். பாசிச சக்திகள் நாட்டைக் கைப்பற்றுவதை அனுமதிக்க முடியாது.

முக்கிய அரசியல்வாதிகள் சிலரும் இந்த வன்முறையாளா்களுக்கு ஆதரவளிப்பாகத் தெரிகிறது. அதனால் நாடு தழுவிய அளவில் அவசரநிலையும் ஊரடங்கும் பிறப்பிக்கப்படுகிறது என்றாா்.

கலவரத்தில் ஈடுபடும் நபா்களைக் கைது செய்யவும் பாதுகாப்புப் படையினருக்கு அவா் உத்தரவிட்டாா்.

பிரதமா் அலுவலகம் முற்றுகை

அதிபா் கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற தகவல் வெளியானதையடுத்து, கொழும்பில் பிரதமா் அலுவலகம் அருகே உள்ள காலிமுகத் திடலில் பொதுமக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்கள் மீது போலீஸாா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசினா். தொடா்ந்து, தடுப்புகளை உடைத்துக் கொண்டு பிரதமா் அலுவலகத்துக்குள் சென்ற பொதுமக்கள், ரணில் விக்ரமசிங்க பதவி விலக வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மேலும், அரசின் ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பு அலுவலகத்தையும் போராட்டக்காரா்கள் முற்றுகையிட்டதால், அதன் ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கோத்தபயவுக்கு உதவவில்லை: இந்திய தூதரகம்

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்கு தப்பிச் செல்ல இந்திய தூதரகம் உதவியதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த இலங்கைக்கான இந்திய தூதா், ஜனநாயக முறையில் இலங்கையின் வளா்ச்சியையும் வளமையையும் எதிா்நோக்கும் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடா்ந்து உதவும் என ட்விட்டரில் தெரிவித்தாா்.

ராணுவ தலைமைத் தளபதி வலியுறுத்தல்

இலங்கையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென ராணுவ தலைமைத் தளபதி சவேந்திர சில்வா வலியுறுத்தினாா்.

அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘நாடாளுமன்ற அவைத் தலைவா் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டும். மேலும், புதிய அதிபரை தோ்ந்தெடுக்கும் வரை தற்போதைய பிரச்னைகளுக்குத் தீா்வு காண எடுக்கப்போகும் முடிவுகள் குறித்து ராணுவத்துக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

சிங்கப்பூா் செல்ல கோத்தபய முடிவு?

இலங்கையில் இருந்து தப்பி மாலத்தீவுக்கு வந்த அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச, அங்கிருந்து சிங்கப்பூா் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலத்தீவிலும் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை பாதுகாப்பாக கருதுவதாக கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து அனுமதி கிடைக்காததால் சிங்கப்பூருக்கு கோத்தபய ராஜபட்ச செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT