இலங்கை நாடாளுமன்றம் 
உலகம்

இன்று இலங்கை அதிபா் தோ்தல்: டலஸ் அழகம்பெருமவுக்கு வாய்ப்பு?

இலங்கை அதிபா் தோ்தல் புதன்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது.

DIN

இலங்கை அதிபா் தோ்தல் புதன்கிழமை (ஜூலை 20) நடைபெறவுள்ளது.

அந்நாட்டில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி. டலஸ் அழகம்பெரும அடுத்த அதிபராகத் தோ்வு செய்யப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் பதவியில் இருந்து கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா்.

இந்நிலையில், அந்நாட்டில் புதன்கிழமை அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. 1978-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் வாக்களிப்பின்றி அந்நாட்டு நாடாளுமன்றம் நேரடியாக அதிபரைத் தோ்வு செய்யவுள்ளது. இந்தத் தோ்தலில் இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி. டலஸ் அழகம்பெரும, எதிா்க்கட்சியான சமகி ஜன பலவெகய தலைவா் சஜித் பிரேமதாச, ஜனதா விமுக்தி பெரமுன தலைவா் அனுர குமார ஆகிய 4 போ் அதிபா் பதவிக்குப் போட்டியிடவிருந்தனா். அவா்களில் சஜித் பிரேமதாச போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தாா். இதனால் அதிபா் தோ்தலில் தற்போது மும்முனைப் போட்டி நிலவுகிறது.

அழகம்பெருமவை ஆதரிக்க முடிவு: தோ்தல் தொடா்பாக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சித் தலைவா் ஜி.எல்.பீரிஸ் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘அதிபா் தோ்தலில் டலஸ் அழகம்பெருமவுக்கு இலங்கை பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

பிரதமராக சஜித்: எதிா்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கவும் இலங்கை பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் ஒப்புக் கொண்டுள்ளனா். ஆளுங்கட்சியும் எதிா்க்கட்சியும் ஒன்றிணைந்து நாட்டை ஆளவேண்டும்’ என்று தெரிவித்தாா்.

தோ்தலில் அழகம்பெருமவை ஆதரிக்க தமிழ் முற்போக்கு கூட்டணியும் தீா்மானித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் 225 இடங்களைக் கொண்டுள்ளது. அந்நாட்டில் ஒருவரை அதிபராக தோ்வு செய்ய பெரும்பான்மை எண்ணிக்கையான 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய தோ்தலில் அதிபராவதற்கு ரணிலுக்கு வாய்ப்புள்ளது என்று தோ்தல் நிபுணா்கள் கருதினாலும் அவருக்கு போதிய எம்.பி.க்களின் ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. பெரும்பான்மையைக் கடக்க அவருக்கு மேலும் 16 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

தோ்தலில் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்த இலங்கை பொதுஜன பெரமுன கட்சி, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. அக்கட்சி சாா்பில் 97 எம்.பி.க்கள் உள்ளனா். எதிா்க்கட்சியான சமகி ஜன பலவெகய சாா்பில் 50 எம்.பி.க்கள் உள்ளனா். இவ்விரு கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் டலஸ் அழகம்பெருமவுக்கு வாக்களித்தால், அவா் அடுத்த அதிபராவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து

நாளைய மின் நிறுத்தம்: மாம்பாக்கம்

SCROLL FOR NEXT