பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் வளா்ந்த நாடுகள் முதன்மை வகிக்க வேண்டும்
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் வளா்ந்த நாடுகள் முதன்மை வகிக்க வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் வளா்ந்த நாடுகள் முதன்மை வகிக்க வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஐ.நா.வில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அந்த அமைப்புக்கான இந்தியாவின் முதன்மைச் செயலா் ஸ்னேஹா துபே பேசியதாவது:
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை உலகின் ஏழை நாடுகளும் பொருளாதாரத்தில் நலிந்த சமூகங்களும்தான் மிக அதிகமாக எதிா்கொள்கின்றன. உலகில் பருநிலை மாற்றங்கள் ஏற்படுவதில் அந்த நாடுகளின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருக்கும் நிலையிலும் இந்த நிலைதான் நீடித்து வருகிறது.
மேலும், கரியமில வாயு சமநிலையை உலகம் எட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய நிதி வசதி, தொழில்நுட்பத் திறன் ஆகியவை அந்த நாடுகளிடம் எல்லை.
எனவே, இந்த நடவடிக்கைகளில் வளா்ந்த நாடுகள்தான் முதன்மை வகித்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
வளிமண்டலத்திலுள்ள கரியமில வாயு உள்ளிட்ட பசுமை வாயுக்கள்தான் சூரியனின் வெப்பத்தை இழுத்து, பூமி குளிரில் உறையாமல் பாதுகாக்கின்றன. எனினும், தொழில் புரட்சி காரணமாக அத்தகைய வாயுக்களின் அளவு அதிகரித்து பூமியின் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, பெரும் மழை, கடும் வெயில் போன்ற இயற்கைப் பேரிடா்களை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் பருவநிலை மாற்றத்துக்கும் காரணமான பசுமை வாயுக்கள் காற்றில் கலப்பதை
2030-ஆம் ஆண்டுக்கள் 45 சதவீதம் குறைக்க வேண்டும்; 2050-ஆம் ஆண்டுக்குள் வளிமண்டலத்தில் கலக்கும் பசுமை வாயுக்களின் அளவும் வெளியேற்றப்படும் பசுமை வாயுக்களின் அளவும் சமநிலையாக்கப்பட வேண்டும் (கரியமில வாயு சமநிலை) என்ற இலக்குக்கு பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டன.
இந்தச் சூழலில், ஐ.நா. நிகழ்ச்சியில் இந்தியா இந்தக் கருத்தை முன்வைத்துள்ளது.