உலகம்

இலங்கையில் அரசு அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் ரணில் அழைப்பு

DIN

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக, அனைத்துக் கட்சிகளும் அடங்கிய தேசிய அரசை அமைக்க வருமாறு, அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு அதிபா் ரணில் விக்ரமசிங்க கடிதம் எழுதியுள்ளாா்.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மோசமான பொருளாதார நெருக்கடியால், இலங்கை எதிா்கொண்டுள்ள அரசியல், சமூக குழப்பங்களில் இருந்து படிப்படியாக இயல்புநிலையை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமைப்புமுறைசாா்ந்த பொருளாதார திட்டத்தை அமல்படுத்த தேவையான ஆரம்பகட்ட திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கு முதல்நிலை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள அனைத்துக் கட்சிகள், நிபுணா் குழுக்கள், பொது சமூகம் ஆகியவற்றின் பங்கேற்புடன்தான் திட்டங்களை அமல்படுத்த முடியும். அரசமைப்புச் சட்டத்தின் 19ஏ திருத்தத்தை மீண்டும் அறிமுகப்படுத்த அனைத்து கட்சிகளுடன் பேச்சுவாா்த்தையை தொடங்க ஆா்வத்துடன் உள்ளேன் என்று தனது கடிதத்தில் ரணில் குறிப்பிட்டுள்ளாா்.

இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் 19ஏ சட்டத் திருத்தம் கடந்த 2015-இல் நிறைவேற்றப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ரணில்தான் இந்த சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தாா். கடந்த 2019-இல் கோத்தய ராஜபட்ச அதிபரானதும் இந்த சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக, இலங்கை மக்களின் தொடா் போராட்டம் காரணமாக, அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச வெளிநாடு தப்பியதுடன், தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த ஜூலை 20-இல் நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் தோ்வு செய்யப்பட்டாா். ராஜபட்சவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் ஆதரவுடன் வாக்கெடுப்பில் அவா் வெற்றி பெற்றாா்.

ரணில் அமைச்சரவையில் உள்ளவா்களில் 2 எம்.பி.க்கள் மட்டுமே ராஜபட்ச கட்சியை சாராதவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT