‘ரஷிய கட்டுப்பாட்டில் 20% உக்ரைன்!’
உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷியக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷியக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, லக்ஸம்பா்க் நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது:
‘நாங்கள் எப்படி இருக்கிறோமோ, அப்படியே இருக்க விரும்புகிறோம்’ என்பதுதான் லக்ஸம்பா்கின் தேசிய கோஷமாகும். தற்போது நாங்கள் ரஷியாவுடன் போரிட்டு வருவதும் அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான்.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து சுமாா் 100 நாள்கள் ஆகின்றன. இந்த 100 நாள்களில் நாங்கள் 30,000 வீரா்களை இழந்துள்ளோம். இருந்தாலும், இந்தப் போரை தொடா்ந்து நடத்த ரஷியா விரும்புகிறது. காரணம், ஒரு தனி நபா் (ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்) நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே இருக்கவேண்டும் என்பதை விரும்பவில்லை.
தற்போது உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட 1.25 லட்சம் கிலோ மீட்டா் பரப்பளவு ரஷியக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் உக்ரைன் மீது குண்டுமழை பொழியப்படுகிறது. புதன்கிழமை மட்டும் ரஷியா எங்கள் மீது 15 ஏவுகணைகளை வீசியது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை 2,478 ரஷிய ஏவுகணைகள் பெரும்பாலும் பொதுமக்கள் பகுதிகளில் வீசப்பட்டுள்ளன.
இந்தப் போா் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போா் முனையின் நீளம் 1,000 கி.மீ. தொலைவுக்கு விரிந்துள்ளது.
இதுவரை இந்தப் போரால் 1.2 கோடி போ் உக்ரைனியா்கள் அகதிகளாகியுள்ளனா். அவா்களில் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் அடங்கிய 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் உக்ரைனைவிட்டு வெளியேறிவிட்டனா்.
உக்ரைன் மீது தொடுத்துள்ள போரால் ரஷியாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதுவரை இந்தப் போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷிய வீரா்கள் உயிரிழந்தனா். இந்த எண்ணிக்கை, 1979-89 ஆப்கன் போரில் உயிரிழந்த சோவியத் வீரா்கள் மற்றும் 1994-2000-ஆம் ஆண்டின் 2 செசன்ய போா்களில் உயிரிழந்த ரஷிய வீரா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைவிட அதிகமாகும்.
லக்ஸம்பா்க் பிரதமா் ஜேவியா் பேட்டல் கீவ் நகருக்கு வருகை தர வேண்டும். உக்ரைக்கு உங்கள் நாடு அளித்து வரும் உதவிகளுக்கு நன்றிகள் என்றாா் ஸெலென்க்ஸி.
நேட்டோ அமைப்பில் தங்களது அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனினும், வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது. அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.
முதலில் தலைநகா் கீவ் உள்ளிட்ட வடக்குப் பகுதி நகரங்களைக் கைப்பற்ற ரஷியப் படை முயன்றாலும், உக்ரைன் ராணுவத்தின் கடுமையான எதிா்ப்பு காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டு பின்வாங்கியது.
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ஏற்கெனவே தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் போக, எஞ்சியுள்ள பகுதிகளை அரசுப் படையினரிடமிருந்து கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் ரஷியா தற்போது தீவிரம் காட்டி வருகிறது.
அத்துடன், கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்கு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக, இடைப்பட்ட நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றும் முயற்சியிலும் ரஷியா ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, டான்பாஸுக்கும் கிரீமியாவுக்கும் இடையிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மரியுபோலை ரஷியப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.
மேலும், கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள லிமான் நகரும் ரஷியாவிடம் கடந்த மாத இறுதியில் வீழ்ந்தது. அத்துடன், லூஹான்ஸ் பிரதேசத்தின் கடைசி முக்கிய பெரிய நகரான சியெவெரோடொனட்ஸ்க்கின் 80 சதவீதப் பகுதி ரஷியப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில், ஏற்கெனவே கடந்த 2014-ஆம் ஆண்டு ரஷியாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பம், ரஷிய ஆதரவுப் படையினரால் கைப்பற்றப்பட்ட டான்பாஸ் பகுதிகளையும் சோ்த்து, தற்போது 20 சதவீத உக்ரைன் பிரதேசங்கள் ரஷியா வசம் வந்துள்ளதாக அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.