புதினை படுகொலை செய்ய வேண்டும்: அமெரிக்காவின் மூத்த செனட் அவை உறுப்பினர்
ரஷிய மக்களால் மட்டும்தான் இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என அமெரிக்காவின் மூத்த செனட் அவை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷிய படையெடுத்துள்ளதை தொடர்ந்து உலகம் முழுவதும் அச்சம் நிலவிவருகிறது. இந்நிலையில், அதிபர் புதினை ரஷியாவில் உள்ள எவரேனும் ஒருவர் படுகொலை செய்ய வேண்டும் என அமெரிக்காவின் மூத்த செனட் அவை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த பிரச்னை எப்படி முடிவுக்கு வரும்? ரஷியாவில் உள்ள எவரேனும் ஒருவர் துணிந்து செயல்பட்டு அவரை கொல்ல வேண்டும்" என தெரிவித்திருந்தார். பின்னர், ட்விட்டரில் அவர், "இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷிய மக்களால் மட்டுமே முடியும்" என பதிவிட்டுள்ளார்.
ரோமானிய பேரரசின் மன்னனான சீசரை ப்ரூடஸ் கொலை செய்ததை மேற்கொள் காட்டிய அவர், "ரஷியாவில் ப்ரூடஸ் உள்ளாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
கடந்த 1944ஆம் ஆண்டு, ஹிட்லரை கொல்ல ஜெர்மன் ராணுவ அதிகாரி கர்னல் ஸ்டாஃபென்பெர்க் முயற்சி செய்து தோல்வி அடைந்தார். இதுகுறித்து மறைமுகமாக பேசிய அவர், "ரஷிய ராணுவத்தில் கர்னல் ஸ்டாஃபென்பெர்க் போன்ற நிறைய வெற்றிகரமான அதிகாரிகள் இருந்திருந்தால்? நீங்கள் உங்கள் நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு சிறந்த சேவையைச் செய்து இருப்பீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | உக்ரைனில் இந்திய மாணவர் காயம்: அமைச்சர் தகவல்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துவரும் கிரஹாம், முன்னாள் அதிபர் டிரம்புக்கு நெருக்கமாக கருதப்படுகிறார்.