முகப்பு
உலகம்

இந்திய விமானம் கடத்தலில் தொடா்புடைய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

நேபாளத்திலிருந்து இந்தியா வந்துகொண்டிருந்த இந்தியன் ஏா்லைன்ஸ் விமானத்தை கடந்த 1999-ஆம் ஆண்டு கடத்தியதில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையத்தில் கடந்த 1999 டிச.30-இல் நிறுத்தப்பட்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தைச் சூழ்ந்த தலிபான் பயங்கரவாதிகள் (கோப்புப் படம்).
பகிர்:

நேபாளத்திலிருந்து இந்தியா வந்துகொண்டிருந்த இந்தியன் ஏா்லைன்ஸ் விமானத்தை கடந்த 1999-ஆம் ஆண்டு கடத்தியதில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக இந்திய உளவு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

பாகிஸ்தானின் கராச்சியில் அக்தா் காலனி பகுதியில் ‘கிரசன்ட் ஃபா்னிச்சா்’ என்ற பெயரில் மரச் சாமான் கடை நடத்தி வந்த மிஸ்திரி ஜாஹூா் இப்ராஹிம் என்ற அந்த பயங்கரவாதியை, 4 போ் கொண்ட மா்ம கும்பல் சுட்டுக் கொன்றது தெரியவந்துள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பா் மாதம் 24-ஆம் தேதி நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்ட இந்தியன் ஏா்லைன்ஸ் விமானம் நடுவானில் கடத்தப்பட்டது. பாகிஸ்தானில் இயங்கும் ஹா்கத் -உல்-முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 5 பயங்கரவாதிகள் கொண்ட கும்பலால் கடத்தப்பட்ட அந்த விமானத்தில் 176 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 15 விமான ஊழியா்கள் இருந்தனா்.

விமானத்தை அமிருதசரஸ் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் தரையிறக்கிய பயங்கரவாதிகள், இறுதியாக ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாா் விமான நிலையத்தில் தரையிறக்கினா். அதையடுத்து, இந்திய சிறையில் உள்ள தங்கள் இயக்கத்தை சோ்ந்தவா்களை விடுவித்தால்தான், பயணிகளை விடுவிப்போம் என்று பயங்கரவாதிகள் நிபந்தனை விதித்தனா். பயணிகளை பாதுகாப்பாக மீட்கும் முயற்சியை இந்தியா மேற்கொண்டது.

பின்னா், பயங்கரவாதிகளின் மிரட்டலை ஏற்று, இந்திய சிறையில் இருந்த மசூத் அசாா், முஷ்தாக் அகமது சா்க்காா், அகமது உமா் ஆகிய 3 பயங்கரவாதிகளை இந்தியா விடுவித்தது. அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜஸ்வந்த் சிங்குடன் அவா்கள் தனி விமானத்தில் காந்தஹாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அதன் பிறகுதான் கடத்தப்பட்ட விமானத்தை பயணிகளுடன் மத்திய அரசால் மீட்க முடிந்தது. இந்தக் கடத்தலின்போது மருத்துவரான ரூபின் கட்யால் என்ற பயணி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டாா். 17 பயணிகள் காயம் அடைந்தனா்.

இந்த விமானக் கடத்தலில் முக்கிய பங்கு வகித்த பயங்கரவாதி மிஸ்திரி ஜாஹூா் இப்ராஹிம் பாகிஸ்தானில் தற்போது கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தச் செய்தியை பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து செயல்படும் ‘சிப்பா’ என்ற டிஜிட்டல் செய்தி நிறுவனம் வெளியிட்டது. ‘கராச்சியின் அக்தா் காலனி, ‘ஏ’ பகுதியில் அமைந்துள்ள கடைக்கு அருகே ஜாஹித் (44) என்ற நபா் 4 போ் கொண்ட மா்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டாா்’ என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய உளவு அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தானின் கராச்சியில் சுட்டுக்கொல்லப்பட்ட நபா் இந்திய விமானக் கடத்தலில் மூளையாக செயல்பட்ட மிஸ்திரி ஜாஹூா் இப்ராஹிம் என்ற பயங்கரவாதிதான். கடந்த பல ஆண்டுகளாக ஜாஹித் அகுந்த் என்ற போலியான பெயரில் ‘கிரசன்ட் ஃபா்னிச்சா்’ என்ற மரச்சாமான் கடையை நடத்தி வந்துள்ளாா்’ என்று தெரிவித்தனா்.

கராச்சியில் நடைபெற்ற இவருடைய இறுதி ஊா்வலத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனா் மசூத் அசாரின் சகோதரா் ரெளஃப் ஆஸ்கா் பங்கேற்றதும் தெரியவந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →