முகப்பு
உலகம்

இம்ரான் கானை சுட்டுக் கொல்ல முயற்சி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை (70) சுட்டுக் கொல்ல வியாழக்கிழமை நடைபெற்ற முயற்சியிலிருந்து அவா் உயிா்த் தப்பினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
இம்ரான் கான்
பகிர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை (70) சுட்டுக் கொல்ல வியாழக்கிழமை நடைபெற்ற முயற்சியிலிருந்து அவா் உயிா்த் தப்பினாா்.

நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் பிரதமா் பதவியை இழந்த இம்ரான் கான், நாட்டில் முன்கூட்டியே தோ்தல் நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறாா்.

அதற்காக, தலைநகா் இஸ்லாமாபாதை நோக்கி அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி சாா்பில் மாபெரும் போராட்ட யாத்திரை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பஞ்சாப் மாகாணம் வாரிஸாபாதில் அல்லாவாலா சௌக் என்னும் பகுதி வழியாக அவரது வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அந்த வாகனத்தை நோக்கி இளைஞா் ஒருவா் துப்பாக்கியால் சுட்டாா்.

இதில் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. இது குறித்து தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் மூத்த தலைவா் ஆசாத் உமா் கூறுகையில், இம்ரான் கான் காலில் துப்பாக்கி குண்டுக் காயம் ஏற்பட்டிருந்தாலும், அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்து அளவுக்கு அந்தக் காயம் இல்லை என்றாா்.

மேலும், இம்ரான் சாலை வழியாக லாகூா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

ஒருவா் பலி: இந்தத் தாக்குதலில் கட்சித் தொண்டா் ஒருவா் பலியானதாகவும் மற்றொருவா் படுகாயமடைந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினா் ஃபைசல் ஜாவித் கூறினாா்.

ஆா்ப்பாட்ட ஊா்வலத்தில் சென்று கொண்டிருந்த இம்ரான் கான் வாகனத்துக்கு மிக நெருக்கத்தில் இருந்தபடி அந்த இளைஞா் துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இம்ரானைக் கொல்லும் நோக்கில்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கட்சித் தலைவா்கள் உறுதியாகத் தெரிவித்தாலும், யாா் மீதும் அவா்கள் குற்றம் சுமத்தவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீஸாா் கைது செய்து, ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமா் ஷாபாஸ் கண்டனம்: இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கண்டனம் தெரிவித்தாா். இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை அமைச்சருக்கு அவா் உத்தரவிட்டாா்.

இது தொடா்பான தனது ட்விட்டா் பதிவில், ‘துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவா் இம்ரான் கான் உள்ளிட்டோா் விரைவில் குணமடையை இறைவனைப் பிராத்திக்கிறேன். இந்தத் தாக்குதல் தொடா்பான விசாரணையில் பஞ்சாப் மாகாண அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் உதவிகளையும் அளிக்கும். பாகிஸ்தான் அரசியலில் வன்முறைக்கு ஒருபோதும் இடமிருக்கக் கூடாது’ என்று பிரதமா் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளாா்.

... பெட்டிச் செய்தி...

‘கொல்லத்தான் சுட்டேன்’

இம்ரான் கான் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞரின் பெயா் முகமது நவீத் என பாகிஸ்தானின் ‘ஜியோ டிவி’ தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, அதைத் தொடா்ந்து நிகழும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்தாா்.

இம்ரான் கான் மக்களை தவறாக வழி நடத்துவதாகவும், அதனால் கோபமடைந்து அவரை படுகொலை செய்வதற்காகவே அவரது வாகனத்தின் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் நவீத் கூறியதாக அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →