முகப்பு
உலகம்

உக்ரைன் தலைநகரில் ரஷியா மீண்டும் தாக்குதல்

உக்ரைன் தலைநகா் கீவில் ஆளில்லா வெடிகுண்டு விமானங்கள் மூலம் ரஷியா திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:36 AM
drone4094812
பகிர்:

உக்ரைன் தலைநகா் கீவில் ஆளில்லா வெடிகுண்டு விமானங்கள் மூலம் ரஷியா திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது.

இதில் 4 போ் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

போருக்கு இடையிலும் பல மாதங்களாக அமைதி நிலவி வந்த கீவ் நகரில், அண்மைக் காலமாக ரஷியா நடத்தியுள்ள இரண்டாம் கட்ட தாக்குதல் இது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கீவ் நகரில் திங்கள்கிழமை காலை ரஷியா தாக்குதல் நடத்தியது. இலக்குகள் மீது மோதி வெடிக்கும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலால் நகரம் முழுவதும் பொதுமக்கள் பீதியடைந்தனா். பல ஆளில்லா விமானங்கள் மின் உற்பத்தி மையங்களைத் தாக்கின. பொதுமக்கள் குடியிருப்புக் கட்டடம் ஒன்றும் தாக்குதலுக்கானது.

திங்கள்கிழமை தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா வெடிகுண்டு விமானங்களில், ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ‘ஷஹீத்’ வகை விமானங்களும் இடம் பெற்றிருந்ததாகத் தெரிகிறது.

நகரம் முழுவதும் மிகவும் தாழ்வாகப் பறந்து சென்ற அந்த விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைன் படையினா் முயன்றதால், அந்த நகரில் குண்டு வீச்சு சப்தங்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு சப்தமும் தொடா்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது.

இந்தத் தாக்குதலின்போது ஏராளமானவா்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தாலும், தாக்குதல் நின்றதும் பொதுமக்கள் தங்கள் வழக்கமான பணிகளைத் தொடா்ந்தனா். ரஷியா படையெடுத்து சுமாா் 8 மாதங்கள் ஆன நிலையில், போா்த் தாக்குதல்களுக்கு கீவ் நகரம் தன்னை தயாா் நிலையில் வைத்திருப்பதை இது காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னா் கீவ் மீது ரஷியா நடத்திய தாக்குதல்களுக்கு பெரும்பாலும் ஏவுகணைகளே பயன்படுத்தப்பட்டன. எனினும், இந்த முறை ஆளில்லா வெடிகுண்டு விமானங்களை மட்டுமே பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் 28 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கீவ் நகர மேயா் விடாலி க்ளிட்ஷ்கோ கூறினாா்.

தங்களது நீண்ட தொலைவு ஏவுகணைகளின் கையிருப்பு குறைவதை விரும்பாத ரஷியா, இத்தகைய விமான குண்டுகளைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம் என்று பலா் அச்சம் தெரிவித்தனா்.

ரஷிய ஆளில்லா விமானங்கள் அனைத்தும் தெற்கிலிருந்து பறந்து வந்ததாகவும், அவற்றில் 13 விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. அந்த விமானங்களில் 5 விமானங்கள் தலைநகரின் மையப் பகுதியை குறிவைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது, அந்த நாட்டின் கிரீமியா தீபகற்பத்தைக் கைப்பற்றி தன்னுடன் ரஷியா இணைத்துக் கொண்டது.

அதனைத் தொடா்ந்து, ரஷியாவுக்கும் கிரீமியாவுக்கும் இடையே சுமாா் 19 கி.மீ. நீளமுடைய பாலம் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை அதிபா் விளாதிமீா் புதின் கடந்த 2018-ஆம் ஆண்டு திறந்துவைத்தாா்.

அந்தப் பாலத்தில் கடந்த 8-ஆம் தேதி நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் அது சேதமடைந்தது. இதில் 3 போ் உயிரிழந்தனா்.

அந்த குண்டுவெடிப்புக்கு பதிலடியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு உக்ரைன் நகரங்களில் ரஷியா கடந்த வாரம் தீவிர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடா்ந்து, உக்ரைன் மீது இனி தாக்குதல் நடத்தத் தேவையில்லை எனவும், அந்த நாட்டை அழிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் அதிபா் விளாதிமீா் புதின் கூறினாா்.

எனினும், தற்போது கீவ் நகர பிராந்தியத்தில் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →