உலகம்

பிரிட்டன் பிரதமராகிறார் ரிஷி சுனக்!

DIN

பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்த நாட்டின் பிரதமராகத் தேர்வாகிறார்.

கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரிட்டன் பிரதமராகிறார் என்கிற வரலாற்றை ரிஷி சுனக் படைத்துள்ளார்.

பிரிட்டன் பிரதமராக அண்மையில் தோ்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ், தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். பல்வேறு வரிச் சலுகை அறிவிப்புகளுடன் அவா் கடந்த மாதம் தாக்கல் செய்த மினி பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது.

அந்த பட்ஜெட்டின் எதிரொலியாக டாலருக்கு நிகரான பிரிட்டன் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் லிஸ் டிரஸ்ஸுக்கு எதிா்ப்புகள் எழுந்ததையடுத்து, அவா் தனது பதவி விலகினாா்.

இதைத் தொடர்ந்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தனக்கு 128 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதாக ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ரிஷி சுனக் கடந்த 2009-இல் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியைத் திருமணம் செய்துகொண்டார். 2020-இல் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கரோனா நெருக்கடிக்கு மத்தியில் நிதித் துறையைத் திறமையாகக் கையாண்டதால், போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு அடுத்த பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார் ரிஷி சுனக்.

போரிஸ் ஜான்சன் ராஜிநாமாவுக்குப் பிறகு, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கு லிஸ் டிரஸுக்கு எதிராகப் போட்டியிட்டார். இதில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று பிரிட்டன் பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரிஷி சுனக்கிற்கு முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், “கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், நமது அடுத்த பிரதமராகவும் நியமிக்கட்டதற்கு வாழ்த்துகள். உங்களுக்கு எனது அனைத்து ஆதரவும் உண்டு” எனத் தெரிவித்துள்ளார். 

ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், “இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்கும் உங்களுடன் உலகளாவிய சிக்கல்கள் மற்றும் 2030ஆம் ஆண்டை நோக்கிய இலக்கை அடைய இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறேன். இரு நாடுகளுக்கிடையேயான வரலாற்றுரீதியிலான உறவை மீட்கும் பாலமாக இருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT