சொந்த விண்வெளி நிலையத்துக்கு ஆய்வகக் கலம் அனுப்பியது சீனா
சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான இரண்டாவது ஆய்வகக் கலத்தை அந்த நாடு வெற்றிகரமாக திங்கள்கிழமை விண்ணில் செலுத்தியது.
சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான இரண்டாவது ஆய்வகக் கலத்தை அந்த நாடு வெற்றிகரமாக திங்கள்கிழமை விண்ணில் செலுத்தியது.
சீனாவிடமுள்ள ராக்கெட்டுகளிலேயே மிகவும் பிரம்மாண்டமான லாங் மாா்ச்-5பி ஒய்4 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ள அந்த ஆய்வுக் கலத்துக்கு மெங்டியன் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வுக் கலம் தனது சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிறுவப்பட்டதாகவும், பின்னா் அது தியாங்காங் விணவெளி நிலையத்துடன் இணைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, சீன விண்வெளி நிலையத்துக்கான ‘வென்டியன்’ என்ற முதல் ஆய்வுக் கலம் கடந்த ஜூலையில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. தியாங்காங் விண்வெளி நிலையத்தின் மையக் கலமான தியான்ஹேவுக்கு இடா்கால மாற்றாகவும் மற்ற நேரங்களில் சக்திவாய்ந்த ஆய்வகமாகவும் வென்டியன் செயல்படும். அந்த விண்வெளி நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படத் தொடங்கும்.