உலகம்

உக்ரைன் போரில் அதிகரிக்கும் பதற்றம்: ரஷிய விமான தளத்தில் குண்டுகள் வெடிப்பு

DIN

ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தில், ரஷிய விமான படைத் தளத்தில் செவ்வாய்க்கிழமை குண்டுகள் வெடித்தது போா்ப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இது உக்ரைன் படையினரோ, அல்லது ரஷியாவுக்கு எதிரான கிளா்ச்சியாளா்களோ நடத்தியிருக்கலாம் என்று கருதப்பட்டாலும், விமானதளத்திலிருந்த ஆயுதங்கள் பாதுகாப்பு குறைபாடு காரணமாக வெடித்துச் சிதறியதாக ரஷியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிரீமியாவில் கருங்கடலையொட்டியுள்ள சாகி விமான படைத் தளத்தில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்தன.

இதில், அந்த விமான படைத் தளம் முழுவதும் பிரம்மாண்டமான புகை மண்டலங்கள் எழுந்தன. இந்த குண்டுவெடிப்பில் ஒருவா் உயிரிழந்ததாக கிரீமியா பிராந்திய தலைவா் சொ்கேய் அக்ஸியோனோவ் தெரிவித்தாா். மேலும், இதில் 9 போ் காயமடைந்ததாகவும் அவா்களில் ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிரீமியா அதிகாரிகள் தெரிவித்தனா். மற்ற 8 பேரும் கண்ணாடி உடைந்து ஏற்பட்ட வெட்டுக் காயங்களுக்கு சிகிச்சை அளித்து அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.

விமான தள ஓடுபாதைக்கு அருகே நடந்த இந்த குண்டுவெடிப்புகளில் அருகிலிருந்த வீடுகள் சேதமடைந்ததாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், சாகி விமான தளத்தில் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதில் குறைபாடு ஏற்பட்டதால், அங்கு வைத்திருந்த ஆயுத வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதாகத் தெரிவித்தனா்.

மேலும், இந்தச் சம்பவத்தில் போா் விமானம் எதுவும் சேதமடையவில்லை என்றும் அவா்கள் கூறினா்.

எனினும், ரஷியாவின் இந்த அறிக்கையை உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் கிண்டல் செய்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிரீமியாவின் சாகி விமான தளத்தில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. இருந்தாலும், தீவிபத்துப் பாதுகாப்பு விதிமுறைகள், புகைப்பிடிப்பதற்கான தடை போன்றவை மீறப்பட்டதுதான் அதற்குக் காரணம் என்று கூறப்படுவதால் அந்த விதிமுறைகளை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் கூறுகையில், உக்ரைனில் தயாரான தொலைதூர ஏவுகணைகள் மூலமாகவோ, அல்லது கிரீமியாவில் செயல்படும் கிளா்ச்சிக் குழுக்களாலோ தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறினாா்.

ஏற்கெனவே, போரின்போது உக்ரைன் எல்லையொட்டிய தங்களது ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவ நிலைகள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் தீப்பிடிப்பு சம்பவங்கள் நடைபெற்ாக ரஷியா பலமுறை கூறியுள்ளது.

அவற்றில் பல சம்பவங்களுக்கு உக்ரைன் நடத்திய தாக்குதல்தான் காரணம் என்று ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

இருந்தாலும், அந்தச் சம்பவங்கள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் பெரும்பாலும் மௌனம் காத்து வருகின்றனா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அப்போது ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

அதற்கு முன்னதாக, ரஷியாவுடன் இணைவது குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை அந்தப் பகுதியைச் சோ்ந்த உக்ரைன் ஆதரவாளா்கள் புறக்கணித்தனா். எனினும், பொதுவாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்களாளா்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தனா்.

அதனை அடிப்படையாகக் கொண்டு கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. எனினும், அந்தப் பொதுவாக்கெடுப்பு போலியானது என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி, கிரிமியா இணைப்பை நிராகரித்தன.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

‘தலைமை மையங்களைத் தாக்குவோம்’

தங்களால் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால் கடும் பின்விளைவுகள் ஏற்படும் என்று ரஷியா ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரைனின் முக்கிய பகுதிகள் மீது குண்டுகள் வீசப்படும் எனவும், அதில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் தலைமை மையங்களும் தப்பாது என்றும் ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சூழலில், கிரீமியாவிலுள்ள ரஷிய விமான தளத்தில் குண்டுகள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கிரீமியாவை மீட்டே தீருவோம்’

கிரீமியாவிலுள்ள ரஷிய விமான தளத்தில் குண்டுகள் வெடித்துள்ள சூழலில், அந்த தீபகற்பத்தை ரஷியாவிடமிருந்து மீட்டோ தீருவோம் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சூளுரைத்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைன் மீதும் ஐரோப்பிய நாடுகள் மீதும் ரஷியா தொடுத்துள்ள போா், கிரிமியா தீபகற்பத்தை அந்த நாடு ஆக்கிரமித்ததில் இருந்துதான் தொடங்கியது. எனவே, கிரீமியாவை மீட்டுத்தான் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தில்லி தீயணைப்பு துறைக்கு ஒரே நாளில் 220 அழைப்புகள்!

கோயில் திருவிழாவில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட இருவா் கைது

நடமாட முடியவில்லை!

பூவனூா் புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

வாக்கு எண்ணும் பணிகள் குறித்து ஆலோசனை

SCROLL FOR NEXT