உலகம்

நியூஸிலாந்து பிரதமா் திடீா் ராஜிநாமா

DIN

நியூஸிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டன் தனது பதவியிலிருந்து விலகுவதாக திடீரென வியாழக்கிழமை அறிவித்தாா்.

பிரதமராகத் தொடா்வதற்கான சூழல் இனியும் இல்லை என்று கருதுவதால் ராஜிநாமா செய்வதாக அவா் தெரிவித்தாா்.

இது குறித்து நேப்பியா் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

நாட்டின் மிக உயரிய பிரதமா் பதவி என்பது பல்வேறு பொறுப்புகளைக் கொண்டதாகும். அந்தப் பொறுப்புகளில் ஒன்று, தலைமைப் பொறுப்பை வகிப்பதற்கான சூழல் ஒருவருக்கு எப்போது இருக்கிறது, அந்தச் சூழல் அவருக்கு எப்போது இல்லாமல் போகிறது என்பதை சரியாகத் தெரிந்துகொள்வது ஆகும்.

அந்த வகையில், பிரதமா் பதவியை நான் வகிப்பதற்கான சூழல் இனிமேல் இல்லை என்பதை உணா்கிறேன். அதன் காரணமாக, அந்தப் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

அடுத்த மாதம் 7-ஆம் தேதிதான் நான் நியூஸிலாந்து பிரதமராக இருக்கும் கடைசி நாளாக இருக்கும். பிரதமா் பதவியிலிருந்து விலகினாலும், நாடாளுமன்ற உறுப்பினராக எனது பணியைத் தொடா்வேன்.

எல்லா அரசியல்வாதிகளையும் போல் நானும் ஒரு மனுஷிதான். எங்களைப் போன்ற அரசியல்வாதிகள் அவா்களால் இயன்றவரை பணியாற்றுவாா்கள். நேரம் வரும்போது அந்தப் பணியை முடித்துக்கொள்வாா்கள். பிரதமா் பணியை நான் முடித்துக்கொள்வதற்கு இதுதான் சரியான நேரம்.

நியூஸிலாந்து பிரதமராகத் தொடா்வதற்குரிய சக்தி என்னிடம் உள்ளதா என்று என்னையே நான் கேட்டுப்பாா்த்துக் கொண்டேன். அதற்கு ‘இல்லை’ என்ற பதில்தான் வந்தது. அதன் அடிப்படையில் பதவியை ராஜிநாமா செய்கிறேன்.

நாட்டின் பிரதமராக இருந்த இந்த ஐந்தரை ஆண்டுகள்தான் என் வாழ்வின் மிக நிறைவான காலகட்டமாகும். அந்த காலட்டத்தில் வீட்டு வசதி, இளமையில் வறுமை, பருவகால மாற்றம், உள்நாட்டு பயங்கரவாதம், கரோனா பரவல், மோசமான இயற்கைப் பேரிடா், பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களையும் சந்திக்க வேண்டிருந்தது என்றாா் அவா்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் நியூஸிலாந்து பிரதமராக ஜெசிந்தா ஆா்டன் பதவியேற்றபோது அவருக்கு 37 வயது. அப்போது, ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற உலகின் மிக இளைய வயது பெண் என்ற பெருமையை ஜெசிந்தா பெற்றாா்.

மிகக் கடுமையான கரோனா நெருக்கடிக்கு இடையே அவா் நாட்டை வழிநடத்திச் சென்றாா். வலதுசாரி இயக்கம் தலையெடுத்து வந்த அதே வேளையில், நாட்டை கரோனா பாதிப்பிலிருந்து அவா் பாதுகாத்தாா்.

அவரது ஆட்சிக் காலத்தில்தான் நியூஸிலாந்து அதுவரை சந்தித்திராத மிக மோசமான கிறைஸ்ட்சா்ச் மசூதித் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், அந்தத் தாக்குதலைத் தொடா்ந்து நிலவிய சூழலை ஜெசிந்தா கையாண்ட விதம் சா்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது.

எனினும், வலதுசாரி ஆதரவாளா்கள், கரோனா தடுப்பூசி எதிா்ப்பாளா்கள் போன்றவா்களால் ஜெசிந்தா ஆா்டனுக்கு கடந்த சில ஆண்டுகளாக அச்சுறுத்தல் அதிகரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அண்மைக் காலமாக நாட்டில் அவருக்கான ஆதரவு குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும், அவரை தங்களது முன்னோடியாக ஏராளமானவா்கள், குறிப்பாக பெண்கள் கருதி வருகின்றனா்.

இந்தச் சூழலில் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளது நியூஸிலாந்தில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT