இம்ரானை கைது செய்ய திணறும் காவல்துறை: ராணுவம் களமிறங்கியதால் பதற்றம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய முடியாமல் இரண்டாவது நாளாக காவல்துறையினர் திணறி வரும் நிலையில், ராணுவ வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய முடியாமல் இரண்டாவது நாளாக காவல்துறையினர் திணறி வரும் நிலையில், ராணுவ வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
இஸ்லாமாபாத் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில், இஸ்லாமாபாத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இம்ரான் கானை காவல்துறையினர் கைது செய்யவுள்ள தகவலை தொடர்ந்து அவரது வீடு அமைந்துள்ள ஜமான் பூங்கா முழுவதும் நேற்று காலை முதலே கட்சித் தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
நேற்று மாலை நூற்றுக்கணக்கான காவலர்கள் இம்ரான் கானை கைது செய்ய வந்த நிலையில், அவர்களை இம்ரான் வீடு அருகே நெருங்கவிடாமல் கட்சித் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 20 மணிநேரமாக காவல்துறையினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அதேபோல், இம்ரான் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சித் தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், காவல்துறையினரால் இம்ரான் கானை நெருங்க முடியாததால் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் எனப்படும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை கைது நடவடிக்கைக்காக அரசு களமிறக்கியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் தொண்டர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக இம்ரான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது வீட்டை நோக்கி ராணுவத்தினரால் சுடப்பட்ட துப்பாக்கி குண்டுகளின் புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதேபோல், தான் கையெழுத்திட்ட ஜாமீன் பத்திரத்தை காவல்துறை அதிகாரிகள் ஏற்காமல் கலவரத்தை வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இம்ரான் கானின் கட்சி தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கட்சித் தொண்டர்களை மனித கேடயமாக இம்ரான் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.