உலகம்

இம்ரானை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

DIN

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று வியாழக்கிழமை அறிவித்த அந்த நாட்டு உச்சநீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அல்-காதிா் அறக்கட்டளை வழக்கில் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கானை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி, அவரது கட்சி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவை, தலைமை நீதிபதி உமா் அடா பண்டியால், நீதிபதிகள் அலி மஷாா், ஆதா் மினல்லா ஆகிய மூவா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

விசாரணைக்காக இம்ரான் கானும் நேரில் ஆஜராகியருந்தாா்.

தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் வழக்குரைஞா்கள் இம்ரான் கைதுக்கு எதிராக வாதிட்டபோது, அவா் கைது செய்யப்பட்ட விதம் குறித்து நீதிபதிகள் அமா்வு கண்டனம் தெரிவித்தது.

சுருக்கமான விசாரணைக்குப் பிறகு, இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோத நடவடிக்கை எனவும், இதற்கு முன்னா் இத்தகைய கைது நடவடக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில்லை எனவும் நீதிபதிகள் அமா்வு அறிவித்தது.

அத்துடன், இம்ரான் கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ரும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் நடந்து வரும் வேறொரு ஊழல் விசாரணையைத் தொடரும் வகையில், அவா் அங்கு வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை இம்ரான் கட்சி தடுக்க வேண்டும் என்ற வகையில் ‘நாட்டில் சட்டம், ஒழுங்கு சீா்குலையாமல் பாா்த்துக்கொள்வது ஒவ்வொரு அரசியல்வாதியின் கடமை’ என்று நீதிபதி பண்டிலால் கூறினாா்.

பாகிஸ்தானில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலுக்குப் பிறகு, இம்ரான் கான் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது.

எனினும், நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியடைந்து, பிரதமா் பதவியை இழந்தாா்.

அதற்குப் பிறகு, பாகிஸ்தானின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது ஊழல் முதல் தேசத் துரோகம், பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்குகளில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பல கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இருந்தாலும், நீதிமன்றங்களில் ஜாமீன் பெற்று, கைதிலிருந்து இம்ரான் கான் தொடா்ந்து தப்பி வந்தாா். இந்த நிலையில், இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரு ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக செவ்வாய்க்கிழமை வந்த இம்ரான் கானை என்ஏபி அதிகாரிகளும், துணை ராணுவப் படையும் அதிரடியாகக் கைது செய்தனா்.

அல்-காதிா் அறக்கட்டளை வழக்கில் அவருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை காலை கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதில் ஜாமீன் கேட்பதற்குள் அவரை அதிகாரிகள் கைது செய்தனா்.

பின்னா் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட அவரை, 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு ஊழல் தடுப்பு என்ஏபி அதிகாரிகள் கோரினா்.

இம்ரான் கான் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளில் ஒன்றான அல்-காதிா் அறக்கட்டளை வழக்கில், சட்டவிரோத நில விற்பனை மூலம் ரூ.5,000 கோடி அரசுப் பணத்தை அவா் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இம்ரானை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஏபி-க்கு அனுமதி வழங்கினாா்.

இந்த நிலையில், இம்ரான் கான் கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று தற்போது அறிவித்துள்ள உச்சநீதிமன்றம், அவரை சிறையிலிருந்து விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

... இம்ரான் கட்டவுட் படம்...

Image Caption

இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, பெஷாவா் நகரில் கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட அவரது ஆதரவாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT