டோக்கியோ: கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து கடற்பரப்பில் புதிதாக தீவு ஒன்று உருவாகியுள்ளது.
தெற்கு ஜப்பானில் ஐவோ ஜிமாவுக்கு 1 கிமீ தூரத்தில் உள்ள இந்தப் பெயரிடப்படாத எரிமலை மூன்று வாரங்களுக்கு முன்பாக வெடிக்கத் தொடங்கியது.
வெடிப்பு நிகழ்ந்த பத்து நாள்களுக்குள் எரிமலை சாம்பலும் பாறைகளும் ஆழமில்லாத கடற்பரப்பில் சேகரமாகி அதன் முனை கடலுக்கு மேலாக உயர்ந்து தீவு போல காட்சியளிக்கிறது.
நவம்பர் தொடக்கத்தில் உருவான இந்த நிலம், 100 மீட்டர் விட்டம் கொண்டதாகவும் 20 மீட்டர் உயரத்தோடும் எழுந்துள்ளது. ஆனால் இந்த தீவு இப்படியே நிலையாக இருக்காது எனத் தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
“எரிமலை வெடிப்பு என்பது இந்தப் பகுதிகளில் அடிக்கடி நடப்பது என்றாலும் தீவு போலான நிலம் உருவாவது குறிப்பிடத்தகுந்தது” என்கிறார் ஜப்பான் கடலியல்சார் ஆய்வு முகமையின் ஆராய்ச்சியாளர் யுஜீ உசாய்.
எரிமலை வெடிப்பு தணிந்த பிறகு உருவான இந்த நிலம், நிலைத்தன்மையாக இல்லாததால் எளிதில் அலைகளால் அடித்து செல்லப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
சேர்மானம் குறித்தும் தீவின் வளர்ச்சி குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதற்கு முன்பும் இயற்கை பேரிடரினால் உலகில் பல இடங்களில் தீவுகள் உருவாக்கியுள்ளன.
இதையும் படிக்க: உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு: சீனாவை பின்னக்குத் தள்ளி இந்தியா முதலிடம்!
2013-ல் நிசினோஷிமா பகுதியில் பசுபிக் பெருங்கடலில் உள்ள எரிமலை வருடக்கணக்கில் வெடித்த துகள்களாலும் பாறைகளாலும் புதிய நிலம் உருவானது. அதே ஆண்டில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது புதிய நிலப்பரப்பு தென்பட்டது.
உலகம் முழுவதும் தற்போது 1500 எரிமலைகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் 111 எரிமலைகள் ஜப்பானில் உள்ளன.
ஐவோ ஜிமா இரண்டாம் உலகப் போரின்போது புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.