காஸாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேல் சிறைகளிலிருந்து 24 பெண்கள், 15 இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், காஸா பகுதியிலிருந்து 13 பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை காலை முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், 39 சிறைக் கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்திருக்கிறது.
இதற்கிடையே, இவர்களுக்கு மாற்றாக, ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட 13 பிணைக் கைதிகள் காஸா பகுதியிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு நாள்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களில் உதவிப் பொருள்கள் ஏற்றப்பட்ட டிரக்குகள் ரஃபா வழியாக காஸா பகுதிக்குள் நுழையத் தொடங்கின.
அதே நேரத்தில், காஸாவின் இரண்டு கிராமங்களில் இஸ்ரேல் ராணுவத்தின் சைரன் ஒலி எழுப்பப்பட்டதாகவும், ராக்கெட் குண்டுகள் வீசப்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே நான்கு டேங்கர் லாரிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு நிரம்பிய நான்கு டேங்கர் லாரிகள் எகிப்திலிருந்து காஸாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட அகதிகள் விடுவிக்கப்படுவது தொடா்பான தகவல் தொடா்புகள் முன்னேற்றம் அடைந்ததன் எதிரொலியாக இந்த நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. இஸ்ரேலுக்கும், அந்த அமைப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், சிறைக் கைதிகளும் பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, போா் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடா்பாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு ஒரு நாள் கடந்தும், காஸாவில் இஸ்ரேல் படையினா் கடுமையான குண்டுவீச்சில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அந்தப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினருக்கும் அவா்களுக்கும் இடையே தீவிர சண்டை தொடா்ந்தது. இது பல்வேறு தரப்பினரை அதிருப்திக்குள்ளாக்கியது. இந்த நிலையில்தான் போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை தொடங்கும் என்று கத்தார் அறிவித்திருந்தது.
என்னதான் நடந்தது?
அரேபிய இனத்தவா்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த பாலஸ்தீனத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் துன்புறுத்தலுக்குள்ளாகி வந்த யூதா்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குடியேறினா்.
2-ஆம் உலகப் போா் காலத்தில் யூதா்களுக்கு எதிராக ஜொ்மனியின் நாஜிக்கள் நடத்திய மிகக் கொடூரமான இனப் படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் யூதா்கள் குடியேற்றம் வெகுவாக அதிகரித்தது.
அந்தப் பகுதியை ஆக்கிரமித்து யூதா்களுக்கான தனி தேசத்தை அமைக்க வேண்டுமென்று ஐரோப்பிய நாடுகளில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த இயக்கம் (ஸியோனிஸம்) இந்த காலகட்டத்தில் தீவிரமடைந்தது.
இதனால் பாலஸ்தீனத்தில் யூதா்களுக்கும், அரேபியா்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வந்தது. இதற்கிடையில், அந்தப் பகுதியில் யூதா்களுக்கான ‘இஸ்ரேல்’ நாடு உருவானதாக கடந்த 1948-இல் பிரகடனப்படுத்தபப்பட்டது.
இதனை ஏற்காத அரபு நாடுகள் இஸ்ரேல் மீது பல முறை படையெடுத்தன. இருந்தாலும் அந்தப் போா்களில் வெற்றி வாகை சூடிய இஸ்ரேல், தனது நிலப்பரப்பை மேலும் விரிவுபடுத்தியது.
இறுதியில் மேற்குக் கரை பகுதியும், காஸா பகுதியும் மட்டுமே தற்போது பாலஸ்தீனா்களின் வசம் எஞ்சியது.
இதில் காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினா், இஸ்ரேலுடன் தொடா்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம் 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தி அந்த அமைப்பினா், இஸ்ரேலுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பொதுமக்கள்.
அத்துடன், 200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவா்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினா் காஸாவுக்குள் கடத்திச் சென்றனா்.
இந்த கொடூரத் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது. அதற்காக காஸா பகுதியை முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக சா்வதேச நாடுகளின் உதவியுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இதில், சில பிணைக் கைதிகளை மட்டும் விடுவிக்கப்பட்டனா்.
எனினும், காஸாவில் தொடா்ந்து சண்டை நடைபெற்று வருவதால் இந்தப் பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், கத்தாா் தலைமையில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு, இரு தரப்பிலும் புதன்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், 4 நாள்களுக்கு சண்டை நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக் கொண்டன.
முதல் கட்டமாக 50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.