முகப்பு
உலகம்

நரகமாக மாறும் காஸா: வெளியேறும் 11 லட்சம் மக்கள்!

எங்கு சென்றாலும் தாக்கப்படுவதற்கு இங்கேயே இறக்கிறோம் என பாலஸ்தீனர்கள் தெரிவிக்கிறார்கள்.

Updated On : 14 அக்டோபர், 2023 at 1:19 PM
இடம்பெயரும் காஸா மக்கள்
பகிர்:

இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கிலான மக்கள் வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதிகளில் இருந்து தெற்கு காஸா நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். 

மற்றவர்கள், எங்கு சென்றாலும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து  தப்பிக்க  முடியாது; அதற்குப் பதிலாக வீடுகளில் இருந்தவாறே இறந்து போகலாம் என இடம்பெயர மறுத்து வீதிகளில் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

ஒரு வாரமாகத் தொடர்ந்துவரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இருதரப்பிலும் பலியானவர்கள் எண்ணிக்கை மூன்றாயிரத்தைத் தாண்டியுள்ளது.

Advertisement

கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல், வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் வசிக்கும் 11 இலட்சம் மக்களைத் தெற்கு நோக்கி இடம்பெயரக் கட்டளையிட்டு அந்தப் பகுதிகளைப் போர் மண்டலமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பை வானில் இருந்து துண்டு பத்திரிகைகள் வீசியும் முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒலிக் குறிப்பை (வாய்ஸ் மெசேஜ்) மக்களின் அலைபேசிகளுக்கு அனுப்பியும் இஸ்ரேல், மக்களை வெளியேற வலியுறுத்தியது. இது ’மாபெரும் மனித அழிவை உருவாக்கும்’ என ஐ.நா. எச்சரித்தது. 

இந்த நடவடிக்கை காஸா மக்களின் பாதுகாப்புக்காக என இஸ்ரேல் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் தெற்கு காஸாவுக்குச் செல்லும் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த 2 ட்ரக்குகள் மற்றும் 1 காரை இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசி தகர்த்திருக்கிறது. 

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 70 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர், 200 பேர் காயமுற்றனர் என காஸா அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

ஏற்கெனவே தரைவழியாக தாக்குதலைத் தொடங்கியிருக்கும் இஸ்ரேல், சில இடங்களில் நேரடியான தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. ஹமாஸ் பதுங்கியிருக்கும் சுரங்கங்கள், மக்கள் திரள் அதிகமுள்ள பகுதிகளில்  இருக்கின்றன. 

ஹமாஸ், பாலஸ்தீன மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி வருவதாக  இஸ்ரேல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

வடக்கு காஸாவில் இருந்து இடம்பெயரும் குடும்பம் 

1948-ல் நிகழ்ந்த இடப்பெயர்வை பாலஸ்தீனர்கள் நினைவுகூர்கிறார்கள்.  இஸ்ரேல் உருவான காலத்தில் 500 பாலஸ்தீன கிராமங்களை அழித்தது. இன்றைக்கு இஸ்ரேலாக இருக்கும் நாட்டின் பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 7,50,000 மக்கள் இடப்பெயர்வுக்குத் தள்ளப்பட்டனர். 

இவர்களின் வாரிசுகள்தான் இன்றைய போர்ச் சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். பாலஸ்தீனர்கள் இந்த நிகழ்வை ‘நக்பா’ (பேரழிவு) என அழைக்கிறார்கள். இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதை இரண்டாவது நக்பா என்கிறார்கள்.

"நாங்கள் எங்கு சென்றாலும் எப்படியும் தாக்குவார்களெனில் நாங்கள் ஏன் செல்ல வேண்டும்? வீட்டிலிருந்து இங்கேயே இறந்து போகிறோம்” காஸா நகரத்தில் இருந்து இடம்பெயர மறுக்கும் அபு குதா என்பவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ், மக்கள் யாரும் இடம்பெயர வேண்டாம், பாலஸ்தீனர்களின் ஒற்றுமையைக் குலைக்க அவர்கள் மேற்கொள்ளும் ‘உளவியல் போர்முறை இது’ எனத் தெரிவித்துள்ளது. 

மக்கள் கூட்டமாக இடம்பெயரும் காட்சி

மேலும், இஸ்ரேல் இராணுவம் காஸா பகுதியிலுள்ள அல் அவ்தா மருத்துவமனையைத் தொடர்புகொண்டு  இடம்பெயர ஆணையிட்டுள்ளது. நூற்றுக்கணக்கிலான காயமுற்றவர்களை இடம்மாற்றுவது எளிதானது கிடையாது. அவர்களை கைவிட்டும் செல்ல முடியாது என்ற நிலையில் இராணுவம் கூடுதலான காலக்கெடு அளித்துள்ளது.

பள்ளிகளில் ஐ.நா. நிர்வகிக்கும் முகாம்களில் ஆயிரக்கணக்கிலான மக்கள் தஞ்சம்  அடைந்துள்ளனர். தங்களால் இங்குள்ளவர்களை இடம்மாற்ற முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது, பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை. 

“மனித பேரழிவு வளர்ந்து வரும் வேகம் மற்றும் அளவு சில்லிட செய்கிறது.  காஸா நரகமாக மாறி வருகிறது; அழிவின் விளிம்பில் உள்ளது” என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையின் ஆணையர் பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.