அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, கனடாவுக்கு ஆதரவாக இந்தியாவை விமர்சித்திருப்பதோடு நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளன.
இந்தியா - கனடா இடையே ஏற்பட்டுள்ள மோதலால், கனடா தனது 41 தூதர்களை இந்தியாவில் இருந்து திரும்ப பெற்றுக் கொள்வதாக நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது.
மேலும், இந்தியாவில் உள்ள கனடா மக்கள் அதீத எச்சரிக்கை உணர்வோடு இருக்கும்படியும் கேட்டுக் கொண்டது.
இந்த மோதல், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டில் தொடங்கியது.
இந்தியா ஆணையிட்டதற்கு இணங்க, தனது தூதர்களின் எண்ணிக்கையை 62-ல் இருந்து 41-ஆக குறைத்து கொள்வதாகக் கனடா தெரிவித்தது. சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நேரடி தூதரக சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கனடா தூதரக அதிகாரிகளைத் தாங்கள் திரும்ப பெறச் சொன்னதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, இந்தியா மறுத்துள்ளது.
நிஜ்ஜார் கொலை குறித்த குற்றச்சாட்டில் கனடாவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமெரிக்கா, இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.
”இந்தியாவால் ஆணையிடப்பட்ட தூதர்கள் திரும்ப பெறும் ஆணை, இந்தியாவில் கனடாவின் அரசியல்ரீதியான பங்கேற்பைக் கணிசமாக குறைக்கும். கனடா அதிகாரிகள் இந்தியாவில் இருந்து வெளியேறுவது குறித்து நாங்கள் கவலையுறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார், அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் மாத்யூ மில்லர்.
இதையும் படிக்க: கனடா மக்களுக்கு இந்தியாவில் ஆபத்து: எச்சரிக்கும் கனடா
பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், “கனடா அதிகாரிகளை வெளியேற்றும் இந்தியாவின் முடிவு எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் இருந்தவர், நிஜ்ஜார். காலிஸ்தான் புலிகள் படையைத் தலைமையேற்று நடத்தியவர். வடமேற்கு பகுதியில் சீக்கியர்களுக்கான தனி தேசமான காலிஸ்தானை உருவாக்கும் கொள்கையில் செயல்பட்டவர்.
சில வருடங்களாகவே காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு கனடா ஆதரவாக இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மேற்குலக நாடுகள் இந்தியாவை வலுவாக கண்டிக்காததற்கு காரணம், அவர்களின் ஆசிய எதிரியான சீனாவுக்கு எதிர் இணையாக இந்தியாவை அவர்கள் கருதுகின்றனர் என்ற பர்வையும் முன்வைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.