அமெரிக்காவின் மேன் மாகாணத்தில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு 18 பேரைக் கொன்ற நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மேன் மாகாணத்தில், மதுபான பார், கேளிக்கை விடுதி உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியை காவல்துறையினர் 2 நாள்களாக தீவிரமாக தேடி வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன் மூலம் காவல்துறையினரின் தேடுதல் பணி முடிவுக்கு வந்துள்ளது.
அந்த மாகாணத்தின் 2-ஆவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட லூயிஸ்டன் நகரின் பௌலிங் மையம் மற்றும் உணவகத்தில் ராபா்ட் காா்ட் என்ற 44 வயது நபா் புதன்கிழமை மாலை 6.56 தொடங்கி (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.26) சுமாா் 1 மணி நேரத்துக்கு பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டாா்.
இதில் 18 போ் உயிரிழந்தனா். இது தவிர, மேலும் 13 போ் காயமடைந்தனா்; அவவா்களில் சிலா் துப்பாக்கிச்சூட்டுக்கு பயந்து ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்கள் ஆவா்.
தாக்குதல் நடத்திய நபரை போலீஸாா் 2 நாள்களாக தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், கொலையாளி என குற்றம்சாட்டப்படும் ராபர்ட் கார்ட், அப்பகுதியிலேயே பிறந்து வளர்ந்தவர், ஒரு துப்பாக்கி பயிற்றுவிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகிலுள்ள லிஸ்பன் நீர்வீழ்ச்சியில் இறந்து கிடந்தார் என்று ஜேனட் மில்ஸ் ஆளுநர் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
ராபர்ட் கார்டு இனி யாருக்கும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்பதை அறிந்து மற்றவர்களைப் போலவே இன்று இரவு நானும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன் என்று மில்ஸ் கூறினார்.
புதன்கிழமை மாலை இரண்டாவது துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து தென்கிழக்கே 13 கிலோமீட்டர் தொலைவில் ஆண்ட்ரோஸ்கோகின் ஆற்றுக்கு அருகே இரவு 7:45 மணியளவில் கார்டு உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக மேன் பொதுப் பாதுகாப்புத் துறையின் ஆணையர் மைக் சாசுக் கூறினார்.
அவரைத் தேடும் நடந்து வந்த நிலையில், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள நகரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்களது இல்லங்களுக்குள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டிருந்ததால் தொடர்ந்து இரண்டு நாள்கள் பூட்டி வீடுகளுக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் நடத்திய கொலையாளி ராபா்ட் காா், ராணுவத்தில் பயிற்சி பெற்ற துப்பாக்கிப் பயிற்சியாளா் என்று காவல்துறை பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பது அடிப்படை உரிமையாகக் கருதப்படும் அமெரிக்காவில், பொதுமக்கள் மீது தனி நபா்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்துவதும், இதில் ஏராளமானவா்கள் உயிரிழப்பதும் அடிக்கடி நடந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.