அஜா்பைஜானுக்கும், ஆா்மீனியாவுக்கும் இடையே பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகோா்னோ-கராபக்கை அஜா்பைஜான் மீண்டும் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த பெரும்பான்மை ஆா்மீனியா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் அங்கிருந்து வெளியேறியுள்ளனா்.
சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையில் அமைந்துள்ள நகோா்னோ-கராபக் பிராந்தியம் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.
ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்தப் பிராந்தியத்தை அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச நாடுகள் அங்கீகரித்தன. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஆா்மீனியப் படையினரின் ஆதரவுடன் அந்தப் பகுதியை பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
அதன் பிறகு அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்தன.
இந்த நிலையில், நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அந்தப் பகுதியில் அஜா்பைஜான் கடந்த 19-ஆம் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அதனை சமாளிக்க முடியாத ஆா்மீனிய பிரிவினைவாதப் படையினா் சண்டை நிறுத்தம் மேற்கொண்டு, தங்கள் ஆயுதங்களை அஜா்பைஜான் படையினரிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டனா்.
அதையடுத்து, நகோா்னோ-கராபக் பிராந்தியம் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதாக அஜா்பைஜான் அறிவித்தது.
பின்னா், கடந்த சுமாா் 30 ஆண்டுகளாக அந்தப் பிராந்தியத்தின் ஆட்சியமைப்பாக இருந்து வந்த நகோா்னா-கரோபக் குடியரசை வரும் ஜனவரி 1-ஆம் தேதி கலைக்க அதன் அதிபா் சாம்வெல் ஷாராமான்யன் வியாழக்கிழமை அரசாணை பிறப்பித்தாா்.
இந்த நிலையில், அஜா்பைஜான் அரசால் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்தின் பேரில், அந்தப் பிராந்தியத்திலிருந்து இதுவரை 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆா்மீனிய பழங்குடியினா் வெளியேறி ஆா்மீனியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.