உலகம்

கண் சொட்டு மருந்து விட்டவர் பலி: சென்னை மருந்து நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை

ENS


புது தில்லி: சென்னையை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கண் சொட்டு மருந்து செலுத்திய 55 பேருக்கு, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பாக்டீரியா பாதிப்பை ஏற்படுத்தி, ஒருவர் பலியாகக் காரணமாக இருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவின் 12 மாகாணங்களில் பயன்படுத்தப்பட்ட இந்த சொட்டுமருந்தால் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் இயங்கி வரும் குளோபல் பார்மா ஹெல்த்கேர் தனியார் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை இறக்குமதி செய்ய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பலரும் கண்பார்வையை இழக்கக் காரணமாக இருந்த ஏராளமான கண் சொட்டு மருந்துகளை குளோபல் பார்மா ஹெல்த்கேர் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. 

கண்களில் செயற்கையாக கண்ணீர் வரவழைக்கும் சொட்டு மருந்துகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அந்த சொட்டு மருந்துகளும் திரும்பப்பெறப்பட்டு வருவதாக அமெரிக்க சுகாதார ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவில் விற்பனைக்கு வந்த அனைத்து கண் சொட்டு மருந்துகளையும் குளோபல் பார்மா திரும்பப் பெற்றுக்கொண்டிருப்பதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கண் சொட்டு மருந்துகள் இந்தியாவில் விற்பனையில் இல்லை.

தற்போது வரை சென்னையில் இயங்கி வரும் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த சொட்டு மருந்து பயன்படுத்திய 55 பேருக்கு கண்களில் தொற்று, கண்பார்வை நிரந்தரமாக இழந்தது, ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் மரணமடைதல் வரை நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

செயற்கையாக கண்ணீர் வரவழைக்கும் கெட்டுப்போன சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தியிருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கண்களில் ஏதேனும் எரிச்சல் அல்லது தொந்தரவு, கண் வறட்சி போன்றவற்றுக்கு செயற்கை கண்ணீர் வரவழைக்கும் சொட்டு மருந்து பயன்படுத்தப்படுகிறது.

மருந்து தயாரிப்பு நிறுவனம், மருந்து உற்பத்தியில் பல்வேறு விதிமுறைகளை மீறியுள்ளதாக உணவு மற்றும் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதாவது, தேவையான அளவுக்கு நுண்ணுயிர் பரிசோதனைகள் செய்யாதது, சரியான முறையில் பெட்டகத்தில் அடைக்காதது மற்றும் மருந்துக் குப்பிகள் சேதமடையாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை செய்யாதது உள்ளிட்டவையும் காரணங்களாக அமைந்துவிட்டன.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் எஸ்ரிகேர் ஆர்டிபிஷியல் டியர்ஸ் (EzriCare Artificial Tears) என்ற மருந்துகளை வாங்கவும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதில் பாக்டீரியா தொற்றியிருக்கும் அபாயம் இருப்பதாகவும் அறிவுறுத்தியிருக்கிறது.

ஒருவேளை பாக்டீரியா பாதித்த சொட்டு மருந்தைப் பயன்படுத்தினால், கண் தொற்று அல்லது பார்வை இழப்பு அல்லது மரணம் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 12 மாகாணங்களில் கண் சொட்டு மருந்து பயன்படுத்திய 55 பேருக்கு பாதிப்பும் ஒருவர் மரணமடைந்த நிலையில், நாடு முழுக்க இந்த எச்சரிக்கைத் தகவல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்புக்குக் காரணமான பாக்டீரியா பாதிப்பை இதற்கு முன்பு அமெரிக்காவில் கண்டறியப்பட்டதே இல்லை என்றும், ஒருவர் பலியாகி, ஐந்து பேருக்கு நேரடியாக கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.  ஒருவேளை, இந்த மருந்தை ஏற்கனவே பயன்படுத்தி கண்களில் ஏதேனும் சிறு பிரச்னை ஏற்பட்டிருந்தாலும் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்படாத, பல பயன்பாடுகளைக் கொண்ட குப்பிகளில் மருந்துகளை அடைக்கும் நடைமுறையை மருந்து தயாரிப்பு நிறுவனம் பின்பற்றியிருக்கலாம் என்றும், இதுவே குப்பிகளில் பாக்டீரியா தொற்று பரவும் ஆபாயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


சென்னையில் இயங்கி வரும் குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம், ஏராளமான மருந்துகளை தயாரித்து தெற்காசியா, மத்திய அமெரிக்கா, ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளால், வெளிநாடுகளில் உயிரிழப்பு நேரிடும் சம்பவங்கள் இது மூன்றாவதாக உள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் மரணமடைந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT