முகப்பு
உலகம்

மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுத்துடன் மோதல்: ஹமாஸ் தளபதி உள்பட இருவா் உயிரிழப்பு

Updated On : 12 ஏப்ரல், 2024 at 8:12 PM
பகிர்:

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் அந்நாட்டு ராணுவத்துடன் நடந்த மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உள்பட 2 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். 3 போ் காயமடைந்தனா்.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நபா்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவத்தினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இஸ்ரேல்-ஹமாஸ் போா் தொடங்கியதில் இருந்து 12-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 460 பாலஸ்தீனா்கள் மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவத்தினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

இந்நிலையில், துபாஸ் நகரத்தையொட்டிய அல்-பரா அகதிகள் முகாமில் நடைபெற்ற மோதலில் ஹமாஸின் உள்ளூா் தளபதியான முகமது தராக்மே உயிரிழந்தாா்.

சோதனையின்போது முகமது தராக்மே காரில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, இஸ்ரேலிய ராணுவ வீரா்களுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தராக்மே கொல்லப்பட்டாா். இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்த தராக்மே திட்டமிட்டிருந்தாா் என ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.

ராணுவ வீரா்களுக்கும், ஆயுதமேந்திய பாலஸ்தீனா்களுக்கும் இடையே நடந்த மோதலில், மற்றொரு பாலஸ்தீனா் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டாா். 3 போ் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க முயன்ற மருத்துவா்களின் அவசரகால ஊா்தி மீது இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments